கோவை, ஏப். 8-பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால்கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்படும்என கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு மேலும்கூறியதாவது: இந்தியாவில் ராதாகிருஷ்ணன் குழு ஏற்படுத்திய யுஜிசி-யை கலைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. யுஜிசி மூலமாக கல்லூரிகளுக்கும், மாணவர்களின் ஆய்வுகளுக்கும் தேவையான நிதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழங்களுக்கான பல்வேறு நிதி உதவிகள் கிடைக்கப் பெறவில்லை இதனால் ஆராய்ச்சி மாணவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் யுஜிசியை கலைத்துவிட்டால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போகும். இதற்காக கல்வியாளர்கள் போராடினார்கள். தற்போது யுஜிசியை கலைக்கும் திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, மருத்துவ படிப்பிற்கு நீட்தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துள்ளது. அதோடு, மருத்துவ மேற்படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டு வந்ததன் முலம் நல்ல தரமான மருத்துவர்களை இழக்க நேர்ந்தது. குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும். ஏன் என்றால் மருத்துவ படிப்பு முடித்தபிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தால், மருத்துவ மேற்படிப்பிற்கு அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். ஆனால், தற்போது நீட் தேர்வினால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய வேண்டிய அவசியம் ஏற்படாமல் போய்விட்டது.
பாஜகவை புறக்கணிக்கணியுங்கள்
மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடு நடப்பதாக கூறி அதனையும் கலைக்க முயற்சித்தது. ஆனால், பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. முறைகேடு நடந்தால் அதனை களைய வேண்டுமே தவிர, மருத்துவ கவுன்சிலை கலைக்கக்கூடாது. இவ்வாறு, மத்திய அரசு கல்வியை சந்தைமயமாக்கி முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும் சூழலை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் கல்வி உரிமை முற்றிலுமாக பறிக்கப்படும். கல்வி தனியார் மயமாக்கப்படும். எனவே, பொதுமக்கள் அந்த அபாயத்தை உணர்ந்து பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.மேலும், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், மாணவர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க போராடியவர், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர். எனவே, அவருக்கு கோவை மக்கள்வாக்களிக்க வேண்டும் என்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேட்டுக்கொண்டார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாணவர் நல பெற்றோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தெய்வேந்திரன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்