tamilnadu

img

கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் அறிக்கை வெளியீடு

கோயம்புத்தூர், ஏப்.8-

கோவை நாடாளுமன்ற தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தேர்தல் அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. கோவை சௌரியபாளையம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப் பட்ட தேர்தல் அறிக்கையில், ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்முனைவோர் பாண்டியன், மூர்த்தி, ஜோதிபாசு ஆகியோரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சௌரியபாளையம் பகுதியைச் சார்ந்த வியாபாரிகளும் பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் மாநகர செயலாளர் கணபதி சிவக்குமார், மதிமுக மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ‘திறன்மிகு கோவை, அதுவே நம் தேவை’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “கோவையின் அடை யாளமாக இன்றும் சிறுவாணி குடிநீரும்,சிறு குறு தொழில்களும் உள்ளன. இந்த அடையாளத்தை அழித்திட மத்திய - மாநில அரசுகள் முயற்சிகின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் சீரழிந்துள்ளன. கோவை நகர மக்களின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது.


இதனை தடுத்து கோவையின் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. மக்கள் நலன் பாதுகாப்பதற்கான கொள்கைகளுடன் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மிகச் சிறப்பான பணிகளை மேற் கொள்வேன்” என்று பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்ட கோவை மாவட்டத்தில், சமீப நாட்களாக தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகிறது. சிறு தொழில்கள் மூடப்படுவது, பல்லாயிரக்கணக்கில் வேலை இழப்பு என வேதனைகள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் மத்திய அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கைகளே. நலிந்துவரும் தொழில் சூழலை மாற்றியமைத்து திறன்மிகு கோவையாக மாற்றியமைப்பதே இப்போதைய உடனடி தேவையாகும். ஏற்கனவே, கோவை நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது மத்திய அரசிடம் வாதாடி, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை கோவைக்கு கொண்டுவர முடிந்தது. 10 ரயில்களை கொண்டுவரமுடிந்தது. இவ்வகையில், சொல்வதை செய்யும் ‘செயல் திறன்’கொண்ட வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ள பி.ஆர்.நடராஜன், “செல்லா நோட்டு,ஜிஎஸ்டி அறிவிப்புக்கு பின் கோவை யின் தொழில்கள் பாதிக்கப்பட்டன. சுற்றோட்டத்திற்கான கையிருப்பு உறிஞ்சப்பட்டு ஜாப் ஆர்டர் நிறுவனங் கள், சிறு வணிக சந்தைகள் நெருக்கடியில் சிக்கின. அதனைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, அமலாக்கப் பட்ட விதமும் சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. கோவையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்  பலலட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். அதனைபாதுகாக்க ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு வாட் வரி விலக்கு இருந்தது. அதே போல, ஜி.எஸ்.டி வரியையும் ரத்து செய்ய வேண்டும். முழுமையடைந்த சரக்குகளுக்கு மிகக் குறைந்த ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவேன் எனக் கூறியுள்ளார்.


இஎஸ்ஐ தர சான்றிதழ் கிடைப்பதைஎளிதாக்கும் விதமாக மாவட்ட தொழில்மையத்துடன் இணைந்த மண்டல ஆய்வுக்கூடம் அமைக்க பாடுபடுவேன். நகைதயாரிப்புக்கான தொழில் நுட்ப வசதி, வடிவமைப்பு கலைக்கூடம் ஒருங்கே அமைந்த மையம் ஏற்படுத்த உழைப்பேன். அரசு பொது துறைக்கு தேவையானபம்ப்செட்களை சிறு குறுந் தொழில் உற்பத்தியாளர்களிடம் வாங்கச் செய்யநடவடிக்கை எடுப்பேன். சிறு குறு தொழில் முனைவோருக்கான நலவாரியம் அமைக்க உழைப்பேன். தேசியமுதலீடு மற்றும் உற்பத்தி மையம் (என்.இ.எம்.இசட்) கோவையில் அமைந்திட நடவடிக்கை மேற்கொள்வேன். தென்னை சார்ந்த புதிய தொழில்கள் உருவாக்கிட , அதற்கேற்ற ஆராய்ச்சிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். விசைத்தறிகளின்வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய குரல் கொடுப்பேன்.விசைத்தறிஉதிரிபாகங்களுக்கு 18 சதவிகித உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாகரத்து செய்ய பாடுபடுவேன். விசைத்தறிகளுக்கான கட்டணமில்லா மின்சார உச்ச வரம்பை அதிகரிக்க முஅயற்சிப்பேன். ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல்செய்ய வேண்டியதில்லை என்ற உச்ச வரம்பை 50 லட்சம் ரூபாய் வரைஎன மாற்றியமைக்க குரல்கொடுப்பேன். பல்லடம், சோமனூர் வட்டாரத்தில் நடுத்தர , சிறு குறு விசைத்தறியாளர்களுக்கு ஜவுளிப் பூங்காவும், ஜவுளிச் சந்தையும் ஏற்படுத்த முயற்சிப்பேன்


சமூக அமைதி

தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தாக எழுந்திருக்கும் கலவர சக்திகள் கோவையின் நல்ல இணக்கமான சூழலை கெடுத்து வருகின்றனர். இந்தநிலையை மாற்றிட உழைக்கும் நோக்கத்துடன் உங்கள் முன்கோவையின் “அமைதிக்கான வேட்பாளராக” நிறுத்தப்பட்டு இருக்கின்றேன்மத நல்லிணக்கம் காப்பது, சிறுபான்மையினர் நலன்களை பாதுகாப்பது, மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், உண்மையான அக்கறையுடன் செயல்படுவேன்.


மீள் குடியேற்றம்

காலம் காலமாக குடியிருந்து வந்த பகுதிகளில் இருந்து நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் தலித் மக்களை மீண்டும் நகர் பகுதிகளிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறு குடியமர்த்துவதற்கான குடிமனைகளை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்அடையாளம் கண்டுள்ளதால், மறுகுடியமர்த்தலை சாத்தியமாக்க முயற்சிகளை மேற்கொள்வேன்.


தொழிலாளர் நலன்

கோவை மாநகரில் மனித கழிவை மனிதரே அள்ளும் அவலத்திற்கு முற்றாக முடிவுகட்டும் வகையில் நவீனகருவிகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்பணி நிரந்தரம் பெற பாடுபடுவேன். கட்டுமானம், சாலையோர வியாபாரம், தையல், கை நெசவு தொழிலாளர்கள் நல வாரியபயன்களுக்கான விதி முறைகளை தளர்த்தி, அனைவருக்கும் பயன்கள் கிடைக்க பாடுபடுவேன்.இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய தங்கும் விடுதி ஏற்படுத்திடவும், வீடற்ற ஏழை மக்களுக்கு குடிமனைப்பட்டா பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய தங்கும் விடுதிஏற்படுத்திடவும், வீடற்ற ஏழை மக்களுக்கு குடிமனைப்பட்டா பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் பனியன், விசைத்தறி தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டமும், காப்பீடு திட்டமும் முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன்.வீட்டு வசதி நிதி பெற்றிட முயற்சித்திடுவேன். கிராமப்புற வேலை உறுதி திட்டம் போல நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டம் உருவாக்க குரல் கொடுப்பேன்.


இளைஞர் நலன்

கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டு அரங்கம் அமைந்திட நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்/இளம்பெண்களின் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் திறன்மேம்பாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வேன்.


கல்வி

கோவையில் மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மேலாண்மை கல்வி நிறுவனம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். கோவை மாநகரில் வெளியூரிலிருந்து வந்து இங்கு தங்கிப்படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பராமரிப்பில் தங்கும் விடுதிகள் அமைத்திட பாடுபடுவேன். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளஅரசுப்பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிட்டுள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை தடுத்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.கோவையில் ஐஏஎஸ் உள்ளிட்டு உயர் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு உதவிடும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திட உழைப்பேன். 


விவசாயிகள்

கெயில் பைப்லைன் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை முன் வைத்து விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளுடன் கரம் கோர்த்து நிற்கிறோம், இனியும் நிற்போம். கெயில் பைப்லைனை சாலை ஓரமாக கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சி எடுப்பேன்.உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதால் விளைநிலங்கள் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.நில உரிமையாளருக்கு செல்போன் கோபுரங்களுக்கு வழங்குவதைப் போல வாடகை வழங்கவலியுறுத்துவேன். கேபிள் மூலமாக கொண்டு செல்ல வலியுறுத்துவேன். ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்றுவோம். கரூர் - கோவை ஆறு வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பாடுபடுவேன். கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் பாரம்பரிய நாட்டுக்கோழி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்துவேன்.


பொது சுகாதாரம்

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைமருத்துவ கல்லூரி உள்ளடக்கியதாக தரம் உயர்த்த பாடுபடுவேன். அரசு மருத்துவ மனையில் அனைத்து வசதிகளுடன், போதுமானமருத்துவர், செவிலியர் எண்ணிக்கையுடன் செயல்பட நடவடிக்கைஎடுப்பேன். அரசு மருத்துவ மனையில் அனைத்து வசதிகளுடன், போதுமானமருத்துவர், செவிலியர் எண்ணிக்கையுடன் செயல்பட நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் கூடுதலாக அரசு மருத்துவமனை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வேன். பல்லடத்தில் பல்லடம், பொங்கலூர் பகுதிமக்கள் பயன்பெற விபத்து, தலைக்காய சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைவசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுப்பேன்.


குடிநீரை பாதுகாக்க

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு கோவை மாநகரின் குடிநீர் விநியோகத்தை தாரைவார்த்துள்ளனர். குடிநீரைதனியார் லாபத்திற்கானதாக மாற்றும் இந்த முடிவைதடுத்து நிறுத்தி அனைவருக்கும் சுத்தமான  குடிநீரை இலவசமாக அரசே வழங்கிட நடவடிக்கை எடுப்பேன் நிலத்தடி நீர் மட்டம் உயர நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிக்கதேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு குடிநீர் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறாமல் தேர்தல் நாடகம் நடத்தி வருகிறது எடப்பாடி அரசாங்கம். சுற்று சூழல் அனுமதிபெற்று திட்டத்தை செயலாக்க நடவடிக்கை எடுப்பேன் திருப்பூர் தெற்கு ஒன்றிய பகுதிகளில்விரிவாக்கத்திற்கு ஏற்ப திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டு கூடுதல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர்தெற்கு ஒன்றிய பகுதிகளில் விரிவாக்கத்திற்கு ஏற்ப திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டு கூடுதல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


நூறு நாள் வேலைத்திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் முழுமையான வேலை சட்டப்படியான கூலி கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். வறட்சி காலங்களில் வேலை நாட்களை 200 ஆகஉயர்த்தவும், கூலியை ரூ.400 ஆக உயர்த்த வலியுறுத்துவேன். குறைந்த பட்ச மாத ஊதியம் அதிகரிக்கவும் முதியோர் ஓய்வூதிய தொகை அதிகரிக்கவும் பாடுபடுவேன்


பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட, பாலியல் குற்ற வழக்குகளில் வேகமாக தீர்ப்புகள் பெற்றிட உறுதியான குரல் கொடுத்து உடன் நிற்பேன். சென்ற அரசு நிர்பயா நிதி ஒதுக்கீட்டில் பெருமளவு செலவு செய்யவில்லை. இந்த நிலைமையை மாற்றி, உரிய திட்டங்களை செயலாக்ககுரல் கொடுப்பேன்.நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33ரூ இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்க துணை நிற்பேன். வெளியூரிலிருந்து கோவை வந்து  தங்கி பணிபுரியும் பெண்களுக்கென அரசு பராமரிப்பிலான தங்கும் விடுதிகள்அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.


சீரான போக்குவரத்து

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போக்குவரத்து சாலைகளை விரிவாக்குவது ,புதிய போக்குவரத்து ஏற்பாடுகளை கொண்டு வருவது அவசியம். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ,திருப்பூர் ,பல்லடம், அவிநாசி, பாலக்காடு ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவர உழைப்பேன். பெங்களுர்,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கோவையில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மேம்பாலங்கள் கட்டுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன்.


கலாச்சாரம்

தனித்த கலாச்சாரம் கொண்ட கோவையின் முற்போக்கு பண்பாட்டுக் கூறுகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுப்பேன்.சாதி பேதம் இல்லாத மத நல்லிணக்கம் பேணுகின்ற சமூக சூழலை உருவாக்க உழைப்பேன் ஆகியவைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.



;