tamilnadu

அவிநாசி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

தலைமையாசிரியர் அடித்ததால் பாதிக்கப்பட்ட  மாணவன் மருத்துவமனையில் அனுமதி

அவிநாசி, ஜூன் 20- அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவனை தலைமை யாசிரியர் அடித்ததில், பாதிக்கப்பட்ட மாணவன் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.  அவிநாசி அருகே பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பவர் மணி கண்டன். இவர் வியாழனன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பு துவங்கியவுடன் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் விஜயலட்சுமி  மாணவர் மணிகண்டனிடம் முடி திருத்தம் செய்யாமல் வந்திருப்பதால் வகுப்பறைக்கு வெளியே நிற்கச் சொல்லியுள்ளார். பின்னர் ஆசிரியர் விஜயலட்சமி மணிகண்டனை தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தலைமை யாசிரியர் குமரேசனும்,  அவரது கார் ஓட்டுநரும் சேர்ந்து   மணிகண்டனை அடித்துள்ளனர்.  இதில் பாதிக்கப்பட்ட மாணவன் மணிகண்டன் அவி நாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கல்வித்துறை, பெற் றோர் சங்கம் மற்றும் அவிநாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து  மாணவர் களை இனிமேல் அடிக்க மாட்டோம் என ஆசிரியர்கள் உறுதி யளித்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

திருப்பூரில் குடிநீர் விநியோகத்தைக்  கண்காணிக்க மண்டல அளவில் குழுக்கள் 

 திருப்பூர், ஜூன் 20- திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோ கத்தைக் கண்காணிக்க நான்கு மண்டலங்களுக்கு தலா  ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் கூறியுள்ளார். திருப்பூர்  மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆணையர் சிவக் குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில்  குடிநீர் சீராக வழங்குவதைக் கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுக் களில் உள்ள அலுவலர்கள் தினமும் குடிநீர் விநியோ கத்தைக் கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக மக்களிடமிருந்து வரும் புகார்களைப் பதிவு செய்து உடனுக் குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் 9 தனியார் லாரிகள், 7 மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் கண்காணித்திட ஆணையர் சிவக்குமார் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பொறியாளர் ஜி.ரவி, மண்டல உதவி ஆணையர்கள் வாசுகுமார், செல்வநாயகம், முகமது சபியுல்லா, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேக்கரியில் கெட்டுப்போன பண்டங்கள் விற்பனை: பினாயில் ஊற்றி அழிப்பு

திருப்பூர், ஜூன் 20- பல்லடத்தில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்த பேக்கரியில் ஆய்வு செய்து கெட்டுப் போன பண்டங்கள் மீது பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. பல்லடம்  கே.என்.புரத்தை (லட்சுமி மில்ஸ்) சேர்ந்த துரைபாண்டி என்பவரின் மகள் சாந்தி. விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து மாற்றுத்திறனாளியான இவரது பிறந்தநாளை முன்னிட்டு திங்களன்று மாலை தந்தை துரைபாண்டி பெரும்பாளி கீதா பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கி வந்தார்.  வீட்டுக்கு வந்து உறவினர் நண்பர் களுடன் கேக்கை வெட்டியபொழுது கேக் அழுகி கெட்டுப் போய் இருந்துள்ளது. இதையறியாமல் கேக்கை சாப்பிட்ட அவரது இளைய மகள் (7) சாருலதாவிற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதன்பின்  கீதா பேக்கரிக்கு துரைபாண்டி சென்று  கேட்டதற்கு சரியாக பதிலளிக்காமல் மிரட்டியுள்ளார்.  இதையடுத்து செவ்வாயன்று உணவுப்பாதுகாப்பு அதிகாரி களிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்பு கடைக்கு வந்த பல்லடம் உணவுப்பாதுகாப்பு அதிகாரி கேசவராஜ் அங்கிருந்த உணவுப் பண்டங்களை ஆய்வு செய்தார். அங்கு இருந்த  கெட்டுப்போன பூஞ்சானம் பிடித்த கேக்கள்,காலாவதியான காளான்கள், நூடுல்ஸ், வேக வைக்கப்பட்ட பழைய ஃபிரைடு ரைஸ், கெட்டுப்போன பால் பாக்கெட்டுகள், பழைய சாஸ் என அனைத்தையும் பினாயில் ஊற்றி அழித்ததுடன் துறை ரீதியான நடவ டிக்கைக்கு கடைக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.