கோவையை அடுத்த பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஷ்- வனிதா. இத்தம்பதியினரின் 6 வயதுடைய மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுமி திங்களன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபின் அருகில் விளை யாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்பின் வெகுநேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள பகுதிகளில் தேடினர். சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பல்வேறு பகுதியில் விடிய விடிய தேடினர். இந்த நிலையில், செவ்வாயன்று அதிகாலை கஸ்தூரிநாயக்கன்புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட காயங்களோடு, சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கதறித் துடித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதன்பின் சிறுமியின் சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக்கோரியும், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தாமதிப்பதைக் கண்டித்தும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை பெறமாட்டோம் எனவும் ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.