கேரள சட்டமன்ற வரலாற்றில் ஒரே நாள் கூட்டம் என்றாலும் 14 ஆம் சட்டமன்றத்தின் 20 ஆவது கூட்டம் முத்திரை பதித்தது. கோவிட் நோய் தொற்று நெருக்கடிகளுக்கிடையே அரசமைப்பு சாசன கடமையை நிறைவேற்ற இந்த கூட்டம் நடந்தது. இதில் நிதி கோரிக்கை நிறைவேற்றியது, எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதித்தது, அதில் முதல்வர் பினராயி விஜயன் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிலுரை, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு கேரளத்திலிருந்து காலியாக உள்ள இடத்திற்கு பிரதிநிதியை தேர்வு செய்தது, திருவனந்தபுரம் விமான நிலையத்தை விற்றுத் தொலைப்பதற்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது, கோவிட் கொள்ளைநோயின் அச்சுறுத்தலில் இருந்து அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கூட்டத்தை நடத்தியது என ஆகஸ்ட் 24இல் நடந்த கேரள சட்டமன்ற கூட்டம் வரலாற்றில் இடம்பிடித்தது.
அரசமைப்பு சாசன ரீதியில் ஆறு மாத இடைவெளியில் அவையை கூட்டுவது, நிதி கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஆகிய கடடைகள் மட்டுமே அரசின் முன்பு இருந்தது. கோவிட் கொள்ளைநோயை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் ஓரிரு மணி நேரம் அவை கூடினால் போதுமானதாக இருந்தது. ஆனால் குறுகிய அரசியலை நிலை நிறுத்தி வரும் எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கால அளவை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ள நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அரசுக்கு அச்சமில்லை. எவ்வாறாயினும், நம்பிக்கையில்லா தீர்மானம் நம்பிக்கை அறிக்கையாக மாறும் என்றும் எதிர்க்கட்சியின் காலடி மண் அரிக்கத் தொடங்குகிறது என்றும் ஆளும் கட்சியின் எச்சரிக்கை நிறைவேறியது. 47 பேர் கொண்ட எதிர்க்கட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க 40 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பதில் எதிர்க்கட்சி உறுப்பினர் வி.டி.சதீசன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார்.
எதிர்க்கட்சியும் சில ஊடகங்களும் வெளியிடும் அறிக்கைகளையும் பொய்களையும் கடந்து அதில் எதுவும் கூற முடியவில்லை. முறைகேட்டில் யார் ஈடுபட்டார்கள், என்ன குற்றச்சாட்டுகள், எந்தவொரு புலனாய்வு நிறுவனம் அல்லது நீதிமன்றத்தால் என்ன குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன என்று அவரால் ஆதாரபூர்வமாக கூற முடியவில்லை. குற்றச்சாட்டுகளுக்கான பதிலை ஆளும் தரப்பு பட்டியலிட்டு விளக்கம் அளித்தது. அதோடு யுடிஎப் ஆட்சிக்காலத்தில் வெட்கக்கேடான நடவடிக்கைகளை அவர்களுக்கு நினைவுபடுத்தவும் செய்தனர். தேசத்தின் முக்கிய முகமைகளால் விசாரிக்கப்படும் வழக்குகளில் லீக், காங்கிரஸ், பாஜக ஊழியர்கள் குற்றவாளிகளாக உள்ளனர். குற்றச்சாட்டுகளை கூறுவோர் தங்களிடம் உள்ள சான்றுகளை ஏன் விசாரணை முகமைகளிடம் ஒப்படைக்கவில்லை. அரசுக்கு எதிரான வழக்குகளுடன் நீதிமன்றங்களுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைத்த பதிலடிகளையும் ஆளும் தரப்பு சுட்டிக்காட்டியது.
ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் லைப் திட்டத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குற்றச்சாட்டு வைத்த வி.டி.சதீசன் அவரது தொகுதியில் அமல்படுத்தும் புனர்ஜதி திட்டத்திற்காக வெளிநாட்டு உதவிகள் பெற்றதையும் அதற்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டது குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவருக்கு எதிரான நம்பிக்கையின்மையை அவை பதிவு செய்தது. கன்சல்டன்சி அரசு என்று கூறியவர்களுக்கு யுடிஎப் காலத்தின் கன்சல்டன்சி நிறுவனங்களை பட்டியலிட்டு ஆளும் தரப்பு பதிலளித்தது. தங்களது காலத்தில் கன்சல்டன்சிகள் இல்லை என சாதிக்க எதிர்க்கட்சி தலைவர் முயன்றார். அவரது ஹரிப்பாடு தொகுதியில் மருத்துவக் கல்லூரிக்காக நியமிக்கப்பட்ட கிட்கோ என்கிற கன்சல்டன்சியை மாற்றி மற்றொன்றை தேர்வு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது விஜிலன்ஸ் நடுவத்தை மாற்றியமைத்து யுடிஎப் அமைச்சர்களின் வழக்குகள் திரும்பப்பெற்றது குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.
இந்த நாட்டுக்காக எப்போதாவது எதிர்க்கட்சி குரல் கொடுத்தது உண்டா? மத்திய அரசு கேரள அரசுக்கு எதிராக துரோகத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது பேசியதுண்டா? ஆளும் தரப்பில் விவாதத்தில் பங்கேற்ற 11 உறுப்பினர்களும் தரம் மிக்க வகையில் விவரங்களை முன்வைத்தனர். ஆனால் எதிர் தரப்பு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதலையும் நடத்தியது. எதிர்க்கட்சி தலைவரும் துணைத்தலைவரும் முறைகேடு என்கிற பெயரில் சில குற்றச்சாட்டுகளைக் கூறினர். அவற்றுக்கு அமைச்சர்கள் கூறிய பதிலுக்கு பிறகு வாயடைத்துப்போனார்கள்.
தூக்கம் தொலைத்த எதிர்க்கட்சி
மூன்றே முக்கால் மணி நேரம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளித்தார் முதல்வர். இது சட்டமன்றத்தின் வரலாற்றுக் குறிப்பாகும். இந்த அரசின் மீது எந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என முதல்வர் கேட்டார். மக்களிடம் நாங்கள் அர்ப்பணம் செய்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற இந்த கால அவவில் ஏதேனும் நடந்துள்ளதா?. எத்தனையோ விசயங்களில் கேரளம் இன்று உலகத்துக்கே முன்மாதிரியாக உள்ளது என்றார். தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் நீங்கள் அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்களா என்றும் முதல்வர் கேட்டார். இந்த சாதனைகள் எதிர்க்கட்சியின் தூக்கத்தைக் கெடுக்கிறது. அதனால்தான் தவறான குற்றச்சாட்டுகளும் நம்பிக்கையில்லா தீர்மானமும். லீக்கில் எஸ்டிபிஐ மூலம் முஸ்லிம் வகுப்புவாதமும், காங்கிரஸில் ஆர்எஸ்எஸ் மூலம் இந்து வகுப்புவாதமும் முன்னெடுத்து இவர்கள் ஒன்றுபடுவது யாருக்கு எதிராக?. மக்கள் தேர்ந்தெடுத்த பெரும்பான்மை உள்ள அவையில் மதச்சார்பற்ற விழுமியங்களை உயர்த்திப்படிக்கும் இந்த அரசுக்கு எதிராக எந்த அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த அரசுக்கு மக்களிடம் நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு மக்களைத் தெரியும். மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் எங்களைப்பற்றிய சரியான புரிதல் உள்ளது. இனி மக்கள் மத்தியில் நாம் சந்திக்கலாம் என முதல்வர் கூறினார். முதல்வரின் விரிவான பதில் எதிர்க்கட்சியை நடுங்க வைத்தது. அவர்கள் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றாமல் அவையின் நடுவில் இறங்கி கூச்சல் போட்டார்கள். தங்கக் கடத்தல் வழக்குடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை அரசின் கவனத்துக்கு வந்ததும் அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. விவாதத்துக்குள்ளான பெண் நீக்கப்பட்டார். இதையடுத்து, முதன்மை செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமைச் செயலாளர் தலைமையில் நிர்வாக விசாரணை நடந்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் மீது உரிய பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ ஆகிய மத்திய அமைப்புகளும் விசாரணை நடத்துகின்றன. திறமையான விசாரணைக்கு யார் பயப்படுகிறார்கள் என்பதை கைதிகளின் தன்மை தீர்மானிக்கும். வலுவான விசாரணைக்கு யார் அஞ்சுகிறார்கள் என்பது சிக்கிக் கொண்டவர்களின் நடவடிக்கைகளை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை பெற்ற அரசு
இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர் பலம் குறைவதற்கும் யுடிஎப் அளித்த கொறடா உத்தரவை இரண்டு உறுப்பினர்கள் மீறினார்கள் என்பதற்கும் ஒரு கூட்டணி கட்சி இரண்டு கொறடா உத்தரவு பிறப்பித்ததற்கும் அவை சாட்சியமானது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர், சபாநாயகருக்கு எதிராக உம்மர் தாக்கல் செய்த பிரேரணையை விவாதிக்காததற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சேபணை தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரிவு 179 (இ) இன் படி, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு 15 நாட்கள் முன்னதாக அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். அதனால்தான் அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சபை ஒருமனதாக நிறைவேற்றியது. முதலமைச்சர் முன்வைத்த தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசினார். கடந்த பட்ஜெட்டுடன் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மசோதாவை சபை நிறைவேற்றியது. ஒதுக்கீட்டு மசோதா 2020–21 மற்றும் துணை கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு சட்டமன்றம் இரங்கல் தெரிவித்தது. எம்.பி.வீரேந்திர குமார் இறந்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த மாநிலங்களவை தொகுதிக்கு எம்.வி.ஸ்ரேயாம் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 88 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். யுடிஎப் வேட்பாளர் லால் வர்கீஸ் கல்பகவாடி 41 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.விவாதம் நம்பிக்கையில்லா தீர்மானமாக இருந்தபோதிலும், இந்த அரசின் சாதனைகளை மக்களுக்கு முன்வைக்கவும், எதிர்க்கட்சியின் கோயபல்ஸ் தந்திரங்களை அம்பலப்படுத்தவும் சிறப்பு அமர்வு உதவியது.
தேசாபிமானியிலிருந்து சி.முருகேசன்