tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தன. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.

எட்வின் ஆர்னால்டு எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு நூலான  ‘ஆசிய ஜோதி’ யைத்    தழுவி தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். “வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய  மதுவுண்டு” என்ற பாடல் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். ‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார். 1922-இல் ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 

24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கவிமணி என்ற பட்டத்தை வழங்கினார். 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

;