கரூரில் கல்குவாரி எதிர்ப்பாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராடி வந்த கல்குவாரி எதிர்ப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகநாதன் என்பவரை திட்டமிட்டு லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், குப்பம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அனுமதி இல்லாமலும், சட்டவிரோதமாகவும் இயங்கி வந்த அன்னை கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கல்குவாரி எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஜெகநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனு கொடுத்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் கடந்த 9.9.2022 அன்று இந்த கல்குவாரியை மூடியுள்ளனர். கல்குவாரி மூடப்படுவதற்கு காரணமாக இருந்த ஜெகநாதனை 10.09.2022 அன்று அதே கல்குவாரி உரிமையாளருக்குச் சொந்தமான அன்னை ப்ளூ மெட்டல் லாரி ஏற்றிக் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது திட்டமிட்டு, சதித்திட்டம் தீட்டி நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும். ஜெகநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி உரிமையாளர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் கல்குவாரி மாபியாக்களால் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் உடந்தையாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணமே உள்ளது.
எனவே, இந்த படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டுமெனவும், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவதோடு, இதற்கு துணை போகும் அதிகாரிகள், காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் படுகொலை செய்யப்பட்டுள்ள ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.