tamilnadu

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் மட்டுமே - உலக வங்கி அறிக்கை

2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

2019-20 நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி குறைவு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மந்தம் எனப் பல பிரச்சனைகள் காணப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல்- ஜூன் காலாண்டில் 5 சதவீதமும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதம் சந்தித்தது. இதை அடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும் என  புள்ளியியல் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 11 வருட மோசமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், பாரத் ஸ்டேட் வங்கியின் கணிப்பில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது. 

அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. பொருளாதார வளர்ச்சி  6 சதவீதம் என்ற தனது, முந்தைய மதிப்பீட்டை உலக வங்கி தற்போது தளர்த்திக் கொண்டுள்ளது. அதேநேரம், அடுத்த நிதியாண்டில் இந்தியாவின், பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக  இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில், வங்கி சாராத நிதி நிறுவனங்களிடமிருந்து (என்.பி.எஃப்.சி) கடன் பெறுவதில் பலவீனமான போக்கு இருப்பதாக, அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

உலக வங்கி அறிக்கைப்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2020-ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. அதாவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட வங்கதேசம் முன்னிலையில் இருக்கப்போகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 3% மற்றும் 3.3% என்ற அளவில்தான் இருக்கும் என்று கணித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2020-ஆம் ஆண்டில், தெற்காசிய பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறது. ஒட்டுமொத்த தெற்காசிய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாகத்தான் இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.