சிவகாசி, நவ. 21- விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பகுதி தான் திருத்தங்கல் நகராட்சி. இது ஒரு மூன்றாம் நிலை நகராட்சி. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. வரி செலுத்தியும் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு திருத்தங்கல் நகரின் ஒவ்வொரு தெருவும் சாட்சி. சில தினங்களுக்கு முன்பு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சொத்துவரி பழைய வரியே வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். அரசு சொத்து வரி உயர்த்திட திட்டமிடும் போதே மார்க்சிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அது மட்டுமின்றி தமிழகத்தில் பல பகுதிகளில் மக்களின் பேராதர வோடு கண்டன இயக்கங்களும் நடைபெற்றது. விளைவு, அரசு குழு அமைத்து அதன் பிறகு முடிவு செய்யும் என்றது. இதனை அறிவித்திட உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் காலம் வரை பொறுத்திருந்து தற்போது அறிவித்ததன் நோக்கம், உள்ளாட்சியில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் இல்லை என்பதால் இத்தகைய அறிவிப்பு. அப்படியானால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப மக்களிடம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
பூட்டியே கிடக்கும் கழிப்பறைகள்
கூடுதலான தொகை வசூல் செய்தும் கூட, மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு முழுவதும் பெண்கள் கழிப்பறை எப்படி செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் ஆய்வு செய்தோம். 21 கழிப்பறைகள் பூட்டிக்கிடக்கும் அவல நிலையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். இங்குள்ள சிறிய நகராட்சிகளில் இத்தகைய அவலம் என்றால் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தோமானால் எத்தனை கழிப்பிடங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் அதற்குரிய வசதிகளை செய்து தராமல் கேட்பாரற்று கிடக்கும் என்பதை நினைக்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் விளைவால் அரசின் நிர்வாகச் சீர்கேடு எந்தளவில் உள்ளது என்பதை நம்மால் எளிதில் பார்க்க முடியும்.
திருத்தங்கல் நகராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களும் கழிப்பறை வசதிகளோடு தான் உள்ளதா என்றால் விடை இல்லவே இல்லை என்பது தான் பதில்... இன்றும் இயற்கை உபாதைகளுக்கு கருவேலம் முட்களே ‘பாதுகாப்பு’ அரண். அது மட்டு மல்ல, தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் வசிக்கும் வார்டில் மட்டும் 3 கழிப்பறைகள் பூட்டிக்கிடக்கும் அவலம். அவர் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி சர்ச்சையாகப் பேசி வருகிறார். தனது சொந்த தொகுதி பிரச்சனையை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
பாரபட்சம் ஏன்?
திருத்தங்கல் சுடுகாட்டில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. திருத்தங்கல் நகராட்சியின் தெருக்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும், சரி பாதி எளிய மக்கள், நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகள் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இருக்காது. ஓரளவு வசதியான குடும்பங்கள் வசிக்கும் தெருக்களில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எளிய மக்களுக்கும் எல்லாவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று கேட்கிறோம். இது மட்டுமல்ல, கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார் என்பதற்காகவே அந்த பகுதி மக்களை பழிவாங்கும் நோக்கத்தோடு அந்தப் பகுதி மக்க ளுக்கு தண்ணீர் விநியோகம் செய்தே பல ஆண்டு கள் ஆகிறது என்ற தகவல்கள் அதிர்ச்சியடையச் செய்தன.
70 வயதான மூதாட்டி சொன்ன வார்த்தைகள். “ நாங்க என்ன கேட்குறோம், தண்ணீர் வசதிதான கேட்குறோம், நாங்களும் பல தடவை மனு கொடுத்துட்டோம், பல் கிட்டயும் சொல்லிட்டோம், எந்த புண்ணியமும் இல்லை; உங்க புண்ணியத்திலாவது ஒரு நியாயம் பொறக்கட்டும்”. அதற்கு நாம், “பக்கத்துலதான அமைச்சர் வீடு, போய் சொல்ல வேண்டியதுதான ” என்று கேட்டோம். அதற்கு அந்த மூதாட்டி, “ நீங்க ஓட்டு போட்டுநான் ஜெயிக்கல. அடிக்கடி வீட்டு வாசல்ல வந்து நிக்கற வேலை வச்சுக்காதீங்கன்னு பேசுறார், நீங்க என்னதான் உச்சாணிக் கொம்புல இருந்தாலும் இங்க இருக்கிற மக்கள பார்க்க வேண்டாமாய்யா ” என்று ஆதங்கத்தோடு பேசினார்.
பல்லாங்குழி தெருக்கள்
2019 மார்ச் மாதம் துவங்கிய குடிநீர் விநி யோகத்திற்காக தோண்டப்பட்ட தெருக்கள் அப்படியே கிடக்கின்றன. மீண்டும் சாலையை செப்பனிட வில்லை. இப்பணி முழுமையாக முடிய 6 மாத காலம் ஆகும் என்கின்றனர். அதுவரை மலைப்பகுதியில் செல்வது போலத்தான் திருத்தங்கல் பகுதி மக்கள் செல்ல வேண்டும். பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகளை செப்பனிட வேண்டும் என்று ஆணையாளரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளோம்.
குழந்தைகள் பூங்கா
திருத்தங்கள் நகரில் 10 ஆயிரம் குழந்தைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் உள்ளது. ஆனால் இங்கு குழந்தைகளுக்கான பூங்கா எதுவும் உருவாக்கப்படவில்லை. நகராட்சி பகுதிகளில் 21 வார்டில் உள்ள காலிமனைகளில் ஒதுக்கீடு செய்தது போக, நகராட்சிக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் நகராட்சி தண்ணீர் பம்பிங் செய்திட முயற்சி செய்தது. இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் பூங்கா அமைக்கலாம் என்று வலியுறுத்தி, நிதி ஒதுக்கீடு செய்திட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி நிதியில் நிதி ஒதுக்கிடக் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறை யில் அமைச்சரிடம் இருந்து பதில் கடிதம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நிலம் தயாராக இருந்தால் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். இதற்கான ஏற்பாட்டை நகராட்சி நிர்வாகம் வேகப் படுத்திட வேண்டும்.
குப்பைக் கிடங்கு
திருத்தங்கல் - விருதுநகர் சாலையில் திருத்தங்கல் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து வரு வோரை வரவேற்பது துர்நாற்றம் வீசும் குப்பைகள் தான். புகைமூட்டி விட்டு சில விபத்துக்களும் நடந்தேறியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வுக்கு வழி காண்பது அவசியம்.
ஆய்வு செய்வது அவசியம்
திருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து திருத்தங்கல் பஸ் நிலையத்தில் குப்பை வண்டிகள் நிறுத்தப் பட்டுள்ளன. எந்த வாகனமும் உள்ளே செல்வதில்லை. மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். எனவே திருத்தங்கலில் நகராட்சி நிர்வாக தென்மண்டல இயக்குநர் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இத்தகைய அவலத்திற்கு காரணம் , உள்ளாட்சி தேர்தலை இத்தனை ஆண்டுகாலமாக நடத்தாமல் வேடிக்கை பார்த்தது தான். இது தான் தமிழகத்தின் ஒட்டு மொத்த நிலைமை என்பதை அனுபவத்தில் பார்க்கிறோம்.
- பி.பாலசுப்பிரமணியன்
சிபிஐ(எம்) சிவகாசி ஒன்றியச் செயலாளர்