tamilnadu

img

குவார்ட்டரும், குடியுரிமை திருத்த சட்டமும்! - ஜிஜி

நாட்டு நடப்பு

மூன்றாவது முறையாக வெறுத்துப்போய் பக்கிரிக்கு போன் போட்டான் டில்லி. ‘‘டோய், எங்கடா கீறே? எம்மா நேரமா உனக்காவ வெயிட்டிக்கினு கீறது?’’ ‘‘மச்சி வந்துகினே கீறேன்டா. இன்னு(ம்) டென் நிமிட்ஸ்ல அங்க கீறேன் பாரு. இங்க ஒரே ராவடிடா. எதுவோ போராட்டம்னு எல்லா ரூட்டையும் கிளோஸ் பண்ணிட்டானுங்க. ரிச்சாவைக்கூட பெரியவரு வூட்லயே வுட்டுட்டு நடந்தே ஓடியாந்துக்கினுகீறேன். ஒண்ணு பண்ணே(ன்), நீயும், சுப்புவும் சரக்கு வாங்கிக்கினு நம்ம இடத்துல குந்துங்க. அதுங்காட்டியும் நான் வந்துர்றேன்.’’ ‘‘டேய் நீதா(◌ே)ன கொஞ்சமுன்னாடி காஸ்(ட்)லி சரக்கு சாப்டலாம்னே. எனுக்கு அதுபேரெல்லாம் தெரியாது. நீ வந்தவுட்டு வாங்கிக்கலாம். நாங்க இங்கியே கீறோம்.’’ என்றான் டில்லி. ‘‘இன்னாவான்டா பக்கிரிக்கு?’’ என்று கேட்ட சுப்புவிடம் ‘‘மச்சா(ன்) இந்த சினிமாவுல காட்டுவானுங்கோ பாத்தியா, லவ்வருக்காவ ஹீரோ வெயிட்டிக்கினு கெடப்பானே மணிக்கணக்கா, அதைவிட கோராமைடா இது. கையில துட்டு வச்சிக்கினு... கடைக்கு முன்னாடி நின்னுகினு... சரக்குவாங்கி அடிக்க முடியாம, அவனவன் மப்பேறிப் போய் பேசற பேச்சை கேட்டுக்கினு...’’

‘‘ஏய்... அவன் வர்றானாமா இல்லியாமான்னு சொல்றா? எனுக்கு டென்ஜன் ஆவுது.’’ என்றான் சுப்பு கடுப்பாகி. ‘‘பக்கத்துல வந்துட்டானாம்டா. நம்பளை சரக்கு வாங்கிட்டு உக்காரச் சொல்றான்.  காஸ்(ட்)லி அயிட்டம் பேரெல்லாம் நமக்குத்தெரியாது. அதனாலதான் அவன் வர்ற வரைக்கும் நிக்கிறேன்’’ என்றான் டில்லி. ‘‘நீங்க இன்னா காஸ்(ட்)லி சரக்கா சாப்டபோறீங்க? எனக்கு செட்டாவாது மச்சி. மாமுலா நாம சாப்பிடற 105 ரூவா சரக்கையே வாங்கிடுங்க எனுக்கு.’’ ‘‘ஏன்டா சுப்பு வேணான்றே? பக்கிரிதான்டா பார்ட்டி வக்கிறான்.’’ ‘‘வேணாம் வுட்ரா, நம்ம உடம்புக்கு சரக்கு மாத்தி சாப்டா சங்குதான் ஊதணும்.’’ ‘‘ஏன்டா அந்தாங்காட்டி பீக்க உடம்பாடா உன்து?’’ என்று சுப்புவைப் பார்த்து டில்லி கேட்கவும் பக்கிரி வரவும் சரியாக இருந்தது. ‘‘சாரி மச்சான் லேட்டாய்டிச்சி. நீங்க போய் குந்துங்க நானு சரக்கு, வாட்டர் பாக்கெட்டு, சைடிஷ்லாம் வாங்கினு வந்துர்றேன்.’’ என்றான் பக்கிரி. அவர்கள் வழக்கமாக உட்காரும் டாஸ்மாக் கடையின் வலதுபுற ஓரத்தில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். ‘‘காண்டாயிட்டேன்டா மச்சான். நீ கூட சுத்தி சுத்தி அப்படி பெயிண்ட் அடிச்சிருக்க மாட்டே. அந்த அளவுக்கு பக்கத்து தெருவுல கீற வூட்டுக்கு போக பத்து ரவுண்டு சுத்த உட்டுட்டானுங்க. எந்த சந்து பொந்துல பாத்தாலும் ஒரே கூட்டம்.’’

‘‘இன்னாத்துக்குடா அங்க அவ்ளோ கூட்டம்?’’ என்று கேட்டான் டில்லி. ‘‘என்னாத்துக்குன்னு தெரியலடா. நான் படிச்ச மூணாங்கிளாஸ் படிப்ப வச்சுக்கிட்டு அப்டி இப்டின்னு எயுத்துங்களை சேத்து படிச்சே(ன்). பேனர்ல ஏதோ ‘‘குடி உரிமை தீர்த்த சட்டம்’’னு  எயுதியிருந்தாமாரி தெரிஞ்சுது.  நாம குடிக்கற உரிமையை தீர்த்துகட்ட ஆர்டரு எதுனா போட்டுட்டாங்களான்னு டவுட் வந்துடுச்சு. அதால பெரியவருகிட்டே  இன்னா நயினா என்னுமோ குடி... உரிமை... தீர்த்தம்னு எயுதியிருக்கேன்னேன். அவுரு சிரிச்சிகினே சொன்னார்டா, ‘‘பக்கிரி, உன்(ைை)னமாரி குடிக்கறவங்க உரிமையை யாரும் கேள்வி கேக்கக் கூடாதாம். உன் பொண்டாட்டிகூட கேக்கமுடியாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க. அதை எதிர்த்துதான் போராட்டம் நடக்குது’’ன்னாரு. அது நெஜமாலுமா இல்ல கப்ஸாவான்னு தெரியலடா.’’ ‘‘பெரியவரு சொல்லிகினது நெஜமாதான்டா இருக்கும். பொய்சொல்லி அவருக்கு இன்னா பெனிபிட்டு கெடக்கப்போ வது. சரி தீர்த்தம்னு எயுதியிருந்து துன்னு சொன்னியே அது என்ன வாம்?’’ கேட்டான் சுப்பு. அவனுக்கு போதை ஏறியிருந்தது. ‘‘அது தீர்த்தம் இல்லியாண்டா. திருத்தமாம். நமுக்குன்னு ஒரு சட்டம் போட்டு அதை திருத்தியிருக்காங்க போலகீது. நீ இன்னான்னு நென்ச்சே.’’ என்று கேட்டான் பக்கிரி சுப்புவிடம். ‘‘நானு, ரெகுலர் கஸ்டமரு துட்டு இல்லாம வர்ற நேரத்துல தீர்த்தம் மாரி கொஞ்சூண்டு சரக்கு தெளிச்சுஉடணும்னு உத்துரவு போட்டுருப்பாங்கன்னு நென்ச்சேன்.’’ என்று சொல்ல பக்கிரியும், டில்லியும் சிரித்தார்கள். பக்கிரி சொன்னான், ‘‘இருந்தாலும் இருக்கும்டா, எனுக்கு தெரில. ஆனா மச்சி உனுக்கு கப்னு ஏறிட்சி போலகீது.’’ என்றான். ‘‘ஏன் உங்குளுக்கு ஏற்லியா?’’ என்றான் சுப்பு.

‘‘சப்புன்னு இருக்குடா மச்சா(ன்), சவுறு வாட்டருமா(தி)ரி’’ என்றான் டில்லி. ‘‘நானு அப்பவே சொன்னேன் கேட்டியா. காஸ்(ட்)லி சரக்குலலெல்லாம் நமுக்கு போதையே ஏறாது. அப்டியே ராவா ஊத்தி கல்ஃபா அடிச்சிபாரு, ஏறுதான்னு.’’ என்றான் சுப்பு. ‘‘ஏய், இப்பவே எனுக்கு வாந்தி வர்ற மாரி கீதுடா. ராவா வேற ஊத்தனேன் அவ்ளதான்.’’ என்றான் டில்லி. ‘‘ஏய்... ஏய்... வாந்தி வர்றமாரி இருந்தா என் உச்சாந்தலையை மோந்துபாரு. நின்னுடும். வா வா.’’ என்ற சுப்பு அவன் தலையை டில்லிக்கு அருகில் கொண்டு சென்றான். ‘‘இன்னாடா மச்சான் இது புது டெக்னிக்கா கீது. தலையில ஆம்லேட் போட்றபோறான்டா பாத்து.’’ என்றான் பக்கிரி. ‘‘அது ஒன்னும் புது டெக்னிக் இல்லை. பழசு தான். இந்தா சகோ. இந்த லெமனை கொஞ்சம் கசக்கி மோந்து பாரு. அப்புறம் நீயா வாந்தி எடுக்கணும்னு நெனச்சாலும் வராது.’’ என்ற வாறு எலுமிச்சை பழத்தை நீட்டினார் பாண்ட்  ஷர்ட் அணிந்து தோள்பட்டையில் பையை மாட்டி யிருந்த 35 வயது தக்க பிரஞ்ச்பேர்டு வைத்தி ருந்த ஆசாமி. டில்லி அதை வாங்கி கசக்கி முகர்ந்தான். வாந்தி வருவது போன்றிருந்த எண்ணம் மறைந்து போனது. 

‘‘சகோஸ். நான் ஏற்கெனவே ஒரு குவார்ட்டர் சாப்பிட்டிருக்கேன். கூட ஒரு கட்டிங்  போட்டாதான் லெவல் சரியாவும் எனக்கு. நான்  ஒரு குவார்ட்டர் வாங்கி கட்டிங் எடுத்துக்கறேன். மீதியை நீங்க சாப்டறீங்களா? ஏன்னா என் லிமிட் அவ்ளதான். மீதியை வீட்டுக்கெல்லாம் எடுத்துக்கிட்டு போக முடியாது. அதனாலதான் கேக்கறேன். என்ன சொல்றீங்க?’’ என்றான். உடனே சுப்பு ‘‘அதுல்லாம் வாணாம் சார்.  ஏற்கெனவே சரக்கு கீது. அதையே குடிக்க முடி யாம அவனுங்கோ குந்திக்கினுகீறானுங்கோ.’’ என்று மறுக்க.. ‘‘அதுலதான் போதையே வரலேங்கி றீங்களே. இருங்க நீங்க ரெகுலரா சாப்பிடற டே  நைட் 105 ரூபா அயிட்டத்தையே வாங்கியாறேன்.’’  என்று கவுண்டருக்கு போனார் அந்த நபர். ‘‘மச்சான் வேணாம்டா. வாயைச் சுத்தி வரப்பு கட்டி குறுந்தாடி வச்சிக்கினுகீறவங்க வில்லங்கமானவங்கடா. குடிச்சுட்டு எதுனா வில்லங்கத்தை வச்சுட்டு போயிடுவானுங்க.’’ என்ற சுப்புவை, ‘‘ஆளைப் பாத்தா அப்படி ஒன்னும் வில்லங்கமா தெர்லியே.’’ என்றான் பக்கிரி. குவார்ட்டர் சரக்கை சரி சமமாக மூன்று கிளாஸ்க ளில் ஊற்றி தண்ணீர் நிரப்பி ஒன்றை பிரஞ்ச்பேர்டு குறுந்தாடி நபர் எடுத்துக்கொண்டு மற்ற இரண்டை டில்லிக்கும் பக்கி ரிக்கும் கொடுத்து விட்டு பேச ஆரம்பித்தார்.

‘‘யாரோ பெரியவர் சொன்னார்னு சொன்னீங்களே அது குடிக்கிற உரிமை பத்தின  சட்டம் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம்.  அதாவது இந்த நாட்டுலதான் நாம குறைஞ்சது 12 வருஷமாச்சும் இருக்கறோமான்னு அர சாங்கத்துக்கு நிரூபிக்கணும். கவர்ன் மெண்ட்கிட்டே அதுக்கான ஆவணத்தை நாம  எல்லாரும் காட்டணும். உங்க மூணு பேருகிட்டே யும் ஆதார்கார்டு, ரேஷன்கார்டு, பாங்க் பாஸ்புக்,  வேற எதுனா டாக்குமெண்ட் இருக்கா?’’ ‘‘இன்னா சாரு? நாங்களே அன்னா டங்காச்சி. நானு ரிச்சா ஓட்றேன், அவன் பெயிண்  டரு, அவன் சென்ட்ரிங் வேலை பாக்கறான். நாங்கல்லாம் டெய்லி பொயப்பை தேட்றதே குது ரைகொம்பா கீது. இதுல நீங்க கேக்கற துல்லாம் எங்கே இருக்கு. எங்க பொண்டாட் டிங்கோ ரேஷன்காடு, ஆதாருகாடு எதுனா வச்சி ருந்தாதான் உண்டு.’’ என்றான் பக்கிரி.    

‘‘இதெல்லாம் சரியா காட்டாட்டி அதையே காரணமாவச்சு நீங்க இந்த நாட்டோட குடிமக்கள் இல்லேன்னு அகதிகளாக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி பண்ணிட்டாங்கன்னா அகதி கள் முகாம்மாதிரி தனி இடத்துல போட்டு அடைச்சு வச்சுடுவாங்க. இந்த நாட்டுல அது மாதிரி ஆளுங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது. அங்கியே இருந்து அப்படியே போய்ச் சேர வேண்டியதுதான். ஜெயில்ல இருக்கறதைவிட கொடுமையா இருக்கும். இந்தசட்டம் வரக்கூடாதுன்னுதான் நாட்டுமக்கள் எல்லாரும் தெருவுல இறங்கி போராடு றாங்க. உங்கமாதிரி அடித்தட்டு மக்களுக்கு இதையெல்லாம் எப்படியாச்சும் கொண்டு சேர்க்கணும். உங்க வீட்டுகிட்டயோ அல்லது நீங்க வேலை செய்யற இடத்துலயோ இது பத்தின விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ்.’’ என்றவர் கடைசி மிடறுவை விழுங்கி விட்டு ‘‘வர்றேன் சகோஸ்’’ என்று எழுந்து போய்விட. பக்கிரியும், டில்லியும், சுப்புவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சுப்பு சொன்னான், ‘‘நான் அப்பவே சொன்னேன்ல வாயச்சுத்தி வரப்பு கட்ன குறுந்தா டிக்காரு எதுனா வில்லங்கத்தை வச்சுட்டு  போயிடுவார்னு. இப்பப்பாரு ஏறுன போதைல் லாம் எறங்கிப்போச்சு. குறுந்தாடிகாரு சொன் னதை நாம டீப்பா டிஸ்கஸ் பண்ணியாவணும். இந்தா டில்லி, போயி 105 ரூவா சரக்கு ரெண்டு குவார்ட்டரு வாங்கியா.’’ என்றவாறு தன் டிரவுசர் சீக்ரெட் பாக்கட்டிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு பக்கிரியைப் பார்த்துச் சொன்னான், ‘‘பக்கிரி, நி சவாரி ஓட்டிகினு போனியே அந்த நைனாவோட நம்பரை குடு. ஒரு கட்டிங் போட்டுட்டு அந்தாளுகிட்டே நான் பேசணும்.’’

;