tamilnadu

14 வயதில் இங்கு வந்தேன்

14 வயதில் இங்கு வந்தேன்

இலங்கையில் யுத்தம் உச்சக்கட்டத்திலிருந்தபோது 1999-ல் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்களில் சிவக்குமாரும் ஒருவர். அப்போது வயது 14. தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். திரும்பவும் இலங்கைக்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் வந்தால் அதற்கு தயாராகவே இருக்கிறார்.  இம்முகாமில் உள்ளவர்களின் பிள்ளைகள், கணவன் அல்லது மனைவி ஒருவரின் பதிவு இருக்காது. ஆனாலும் இந்த குடும்பத்தில் யாராவது ஒருவரது பதிவை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இங்கு அதற்கான போதிய இட வசதியும், அடிப்படை வசதிகளும் கிடையாது. இத்தகைய சூழலில்தான் வாழ்ந்து வருகிறோம். பலருக்கு இங்கு காணி, பூமி, சொத்து இருக்கிறது. அதை விட்டுவிட்டு இலங்கை சென்று அனாதைகளாக வாழ தயாராக இருக்க மாட்டார்கள். நாங்களும் அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க மாட்டோம். அகதிகள் முகாமில் சிறுகடைகள் வைத்துக்கொள்ள மட்டுமே உதவி செய்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க எந்த வங்கியும் கடன் வழங்க முன்வருவதில்லை எனக் குமுறுகிறார்.

போகாத ஊருக்கு வழி ஏது?

“இருப்பிடச்சான்று கேட்கிறார்கள். அசையும், அசையா சொத்து இல்லை என்பதால் எந்த தாசில்தாரும் இருப்பிடச்சான்று தரமாட்டார். அவரால் முகாம் சர்டிபிகேட் மட்டுமே கொடுக்க முடியும். அது செல்லாது. கிராம நிர்வாக அதிகாரி நினைத்தாலும் சான்று கொடுக்க முடியாது இவ்வளவு ஏன்? முதலமைச்சராலேயே தர முடியாது. எனக்கே இதுதான் கதி. இந்த நிலைமைகளில் சட்டங்களைப் போட்டு விதிமீறல், சட்டவிரோதம், குடியுரிமை கிடையாது என்று மதவெறி அமைப்பான ஆர்எஸ்எஸ் சொல்படி நடக்கும் மத்திய பாஜக அரசும், அதற்கு துணைபோகும் அதிமுகவும் கூறுவது சரியில்லை. தாய்நாடு திரும்பியிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை கட்டாயம் கொடுக்க வேண்டும்” என்கிறார் கும்மிடிப்பூண்டி முகாம் தலைவர்.

கிலு கிலுப்பை

எனக்கு இலங்கையில் காணி, பூமி இருந்தது. யுத்தத்தின்போது அனைத்தையும் ராணுவம் பற்றிப் கொண்டது. இதனால் இங்கு அகதியாக வந்து 30 ஆண்டு காலத்தை கழித்துவிட்டேன். இப்போது எனக்கு வயது 69. எங்க பிள்ளைங்க எல்லாம் இந்த ஊரிலே கல்யாணம் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நானும் எனது மனைவியும் இலங்கைக்கு சென்றால் வாழ்க்கைக்கான ஆதாரம் என்ன? ஒன்றுமே கிடையாது. இதனால் இங்கேயே வாழ விரும்புகிறோம். எங்களுக்கு குடிமையுரிமை மறுக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, இரட்டை குடியுரிமை வழங்க கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்று முதலமைச்சர் கூறுவது எங்களுக்கு ‘கிலுகிலுப்பை’ காட்டுவதோடு “தான் தின்ன தவிடு இல்லை... சம்பா நெல்லுக்கு தொப்பை கட்டுகிறேன்” என்பதைப்போல தமிழக அரசின் நிலை உள்ளது.
-கணேஷ், யாழ்ப்பாணம்.

இதுதான் தொப்புள் கொடி உறவா?

தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சனையால் வாழ முடியாமல் நானும் எங்கள் மக்களோடு தப்பிப் பிழைத்து படகுகள் மூலம் இந்தியா வந்தடைந்தோம். இந்த முகாமில் இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்காக வெளியில் சென்று வருகிறோம். இங்குள்ள மக்களும் எங்க உறவுகளாகவே பழகுகிறார்கள். அதிகாரிகளின் பார்வைதான் வேறு மாதிரியாக இருக்கிறது. தமிழ் மொழி பேசும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை வழங்க மறுப்பதுதான் ‘தொப்புள் கொடி உறவா? நாங்கள் எல்லோரும் நாடு திரும்புவோம் என்று அமைச்சர்கள் கூறுவது அவர்களது கருத்து. ஆனால், எங்களைப் பொறுத்தமட்டில் எந்த சூழ்நிலையிலும் இலங்கைக்குச் செல்வதாக இல்லை.
-சுரேந்திரன் (35) கிளிநொச்சி மாவட்டம்.

நாதியற்ற தமிழர்கள்...

இலங்கைப் போரின்போது எனது மகனை இழந்துதான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. இதனால் இலங்கைக்கு திரும்பமாட்டேன். செல்ல விரும்புபவர்களை ஒருபோதும் மறிக்க மாட்டோம்!  அந்த நாட்டில்தான் ஒடுக்கப்பட்டோராக வாழ்ந்தோம் என்றால் தாய்நாடு திரும்பியும் ‘நாடற்ற தமிழனாக’ வாழ்கிறோம். இந்த நிலைமை எத்தனை ஆண்டு காலம்தான் தொடரும்? குடியுரிமை திருத்தச் சட்டத்தால், பாஜக அரசும் அதிமுக அரசும்  எங்களை அனாதைகளாக்கிவிட்டன. எங்களுக்காக போராடும் கல்லூரி மாணவர்களை காவல்துறை அடித்து ரத்தக் காயப்படுத்துவது வேதனையாக இருக்கிறது. பலரும் போராடுகிறார்கள். ஆனால், போலீஸ் அடித்து துன்புறுத்துவதை பார்க்கும்போது இலங்கைக்கு சென்று அங்கேயே செத்து மடிந்து விடலாம் என்றே தோன்றுகிறது. போராடும் அனைவரையும் அழைத்துப் பேசி சமாதானத்தோடு எங்களுக்கு குடியுரிமை கட்டாயம் வழங்க வேண்டும்.- கிருத்துவ தமிழ் பெண்கள்.

எங்கள் தேசம் எது?

எனது தாத்தாவும், பாட்டியும் போரின்போது இறந்துவிட்டார்கள். அப்பா, அம்மா இருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிப் பிழைத்து இங்கு வந்துவிட்டார்கள். பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்றாலும் நான் முகாமில் பிறந்தவள்தான். எனது தாய்நாடு இலங்கையா? இந்தியாவா? என்று கேட்டால் தெரியவில்லை. காரணம், எந்த நாட்டு குடியுரிமையும் என்னிடம் கிடையாது. பட்டப்படிப்பு முடித்தும் எங்கும் வேலைக்குச் செல்ல முடியாமல் இந்த முகாமிலேயே அடைபட்டுக் கிடக்கின்றன.  பெற்றோர் பிறந்த மண்ணை ஒரு முறைக் கூட கண்ணால் பார்த்ததில்லை என்பது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான இளைய தலைமுறைக்கு பெருத்த அவமானமாக இருந்தாலும் நாங்கள் இலங்கைக்கு செல்லவே விரும்பவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் ‘தாய் வீட்டில்’தான் குடியுரிமை கொடுக்க வேண்டும்.    - இளம் பெண் சசிரேகா.

இதற்குத்தான் பிறந்தோமா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எங்களை தவிர்த்தது மனதளவில் நிறைய பாதிப்புதான். காரணம், இப்ப எங்க புள்ளைங்க வயசு 13. அந்த வயசுலதான் இந்த ஊருக்கு எங்க அப்பா அழைத்து வந்தார்.  அப்ப என்னால படிக்க முடியுல. இப்ப எங்க புள்ளைங்கல கஷ்டப்பட்டு படிக்க வைச்சோம். ஒருவன் பி.காம் படித்து இருக்கான். சொந்தகார புள்ள பி.எஸ்சி படித்துள்ளது. இதுபோல நிறைய புள்ளைங்க படிச்சும் வேல கிடைக்கல. பெயிண்ட், சுண்ணாம்பு அடிப்பது, பைப் லைன் தோண்டுவது, மண் கொத்தும் வேலைக்குதான் போறாங்க. இப்ப இருக்கும் விலைவாசியில அரசாங்கம் மாதா மாதம் கொடுக்கும் 750 ரூபாயை வைத்து எப்படி வாழ முடியும்? அரசு வேலைக்கு வழியில்லாம அகதியாகதான் இருக்காங்க. எங்களுக்கு இந்த முகாம்களில் எந்த சுதந்திரமும் இல்ல. ஒன்ணு இந்த நாட்ல எங்களுக்கு ‘சிட்டிசன்’தரனும். இல்லனா எங்க நாட்டுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கனும். இந்த இரண்டையுமே செய்யாம நடுத்தெருல நிக்க வைச்சு நாசமாக போக சொல்றது என்ன நியாயம்?

‘முள் இல்லா சுவர்’....

அனைத்து நாட்டு அகதிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு அகதிகள் முகாம் திருச்சி கொட்டப்பட்டில் இருக்கிறது. புழல் சிறையிலோ அல்லது பிற மத்திய சிறைகளிலோ இருக்கும் குற்றவாளிகள் பெயரை சொல்லி மனு செய்தால் யார் வேண்டுமானாலும் சந்திக்க முடியும். ஆனால், இந்த திருச்சி முகாம் அப்படியல்ல. ரத்த சொந்தங்கள் தவிர வேறு யாருமே பார்க்கவும் சந்திக்கவும் அனுமதியே கிடையாது. இலங்கையில் ஒரு முள்வேலி என்றால் இங்கு சிறப்பு முகாம். அவ்வளவுதான் வேறுபாடு. இத்தகைய சிறையில்தான் செங்கல்பட்டு முகாமில் இருந்தவர்களை இரவோடு இரவாக இடம்மாற்றி அடைத்து வகைப்படுத்துகிறார்கள்; எனவும் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தினர்.
 

;