மீரட்:
உத்தரப்பிரதேசத்தில், பாஜக கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அவரின் சாவுக்கு மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க பாதிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்திரா. பாஜக கவுன்சிலரான இவர், காலிமனை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்னதாக, சதீஷ் சந்திரா எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். எனினும், கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
இந்நிலையில், 2016-ஆம் ஆண்டு மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான் தன்னை தற்கொலை முடிவு வரை கொண்டுவந்து விட்டது என்று சதீஷ் சந்திரா அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.தற்கொலை செய்துகொண்ட பாஜக கவுன்சிலருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.