tamilnadu

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு, ஏப்.13-புஞ்சைபுளியம்பட்டி அடுத்துள்ள எரங்காட்டுபாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்க படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் உள்ள எரங்காட்டு பாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு பவானிசாகர் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக முறையாக குடிநீர் விநியோகிக்க படாததால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக குடிநீர் கிடைக்காமல் அருகிலுள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் விநியோகிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சனியன்று புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் சாலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதன்பின் மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;