வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

சிபிஎம் கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது ரவுடிக்கும்பல் கொலைவெறித் தாக்குதல்...

ஈரோடு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கொடுமுடி தாலுகாச் செயலாளர் கே.பி. கனகவேல் மீது அடையாளம் தெரியாத ரவுடிக்கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறையினர், ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகாச் செயலாளராக உள்ள கே.பி.கனகவேல், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக எப்போதும் முன்னிலையில் நிற்பவர். தகவல்பெறும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பெற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கொடுமுடி வட்டம் காரணாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து  ஞாயிறன்று மாலை சுமார்  7 மணியளவில் கட்சி பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு  கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்,  உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கனகவேலை கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடியது.இதில் தலையின் முன் பகுதி, கழுத்து, இடுப்பின் இடது பகுதி, வலது கணுக்கால் ஆகிய இடங்களில் படுகாயமடைந்த நிலையில் கிடந்த கனகவேலை  மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஈரோடு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  கனகவேல் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, ஈரோடு மாவட்டச் செயலாளர்  ஆர்.ரகுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருத்துவமனைக்குச் சென்று கனகவேலுக்கு ஆறுதல் தெரிவித்தனர். கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் தொலைபேசியில் கனகவேலை தொடர்பு கொண்டு  நடந்த விபரங்களை கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.

கண்டனம்
கனகவேலை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறை  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. மேலும்  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரை சந்தித்து இச்சம்பவம் குறித்து  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். 

ஆர்ப்பாட்டம்
கொலை வெறித்தாக்குதலை கண்டித்தும், ரவுடிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் பிப்ரவரி  25 அன்று கொடுமுடி வட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;