tamilnadu

img

கொரோனா வைரஸ் உலக நாடுகளின் மாறுபட்ட அணுகுமுறைகள்

கொரோனா வைரசுக்கு  எதிரான போரில் 

உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படத் தவறிவிட்டன. ஐ.நா.பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரேஸ் உலகளாவிய போர் நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும். பொருளாதாரத் தடைகளை உடனடியாக விலக்கி கொள்ளப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் தலைவர்களும் கொரோனா தாக்குதலுக்கு எதிராக கரம் கோர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். இந்த ஆண்டில் மட்டுமே உலகத் தொழிலாளர்கள் வேலை இழப்பால் 3.4 டிரில்லியன் டாலர் வருமானத்தை இழப்பர். பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் அவர்களுக்கு சுமையாக மாறிவிடக் கூடாது. எனவே, உலக நாடுகள் நிவாரண நடவடிக்கையாக இரண்டு பில்லியன் டாலர் விடுவிக்க வேண்டும் என்றார். பேரழிவை எதிர்கொள்ள இன்னும் பல டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்றார்.

வெற்று வாக்குறுதிகள்

அவரின் வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை. ஜி 7 நாடுகள் கூடின. அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் கருத்து வேறுபாடு கொண்டதால் கூட்டறிக்கை கூட இல்லை. கொரோனா வைரசை “வுஹான் வைரஸ் “எனக் குறிப்பிட அமெரிக்கா வற்புறுத்தியது. இதற்கு உடன்பட ஜி 7 அமைச்சர்கள் மறுத்து விட்டனர். பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் மருத்துவ நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார்.  ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியவற்றுடன் ஒத்துழைத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று சொல்வதோடு முடித்துக் கொண்டனர். இதிலும் கூட மோடி உலக சுகாதார நிறுவனம் திறமை மிக்கதாக இல்லை. எனவே அது மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் கொடூரமான பொருளாதாரத் தடைகள்

டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே தான் விதித்த பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்குப் பதிலாக ஈரான், வெனிசுலா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. சீனா, ரஷ்யா, ஈரான், வெனிசுலா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகளும், ஐ.நா.மனித உரிமை அமைப்பும் தொற்று நோய் நெருக்கடியை எதிர்கொள்வதில் பொருளாதாரத் தடைகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தடைகளை விலக்கி கொள்ள அந்நாடுகள் கேட்டும் அமெரிக்கா மறுத்துவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஈரானுக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களையும் அனுப்பி வைத்தன.

ஜி 20 நாடுகளின் தலைவரான சவூதி அரேபியா, ஏமன் மீதான போரை நிறுத்த வில்லை.அங்கு மருத்துவ மனைகளும், மருத்துவ கட்டமைப்புகளும் நான்கு ஆண்டு காலப் போரினால் முற்றிலும் நாசமாகிவிட்டது.

கொரோனா வைரஸ் மனிதனின் மீது உக்கிரமாக தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிற போதும், இஸ்ரேல் முற்றகையிட்டுள்ள காசாக் குன்றுகள், மேற்குகரைப் பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை இஸ்ரேல் அழித்து விட்டது. 26 லட்சம் மக்கள் வாழும் அப் பகுதியில் 56 வெண்டிலேட்டர்களும், 40 அவசர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. 

தரவுகளை மறைக்கும் எகிப்து

எகிப்தில் உள்ள ராணுவ சர்வாதிகார அரசு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறது. மருத்துவ ஆய்வு இதழ் “லான்செட்” மார்ச் வாக்கில் எகிப்தில் 19300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால், எகிப்து மூன்று பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தது.ஆனால்,மார்ச் முடிவில் இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட நாற்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர்.

சார்க் அமைப்பு நாடுகளின் கூட்டம் தொற்று நோயை எதிர் கொள்ள சார்க் நாடுகளிடையே பொதுவான செயல் திட்டத்தை உருவாக்க மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக மார்ச்15 இல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மோடி பிரதமராக வந்ததிலிருந்தே சார்க் தனது பொருத்தப்பாட்டை இழந்து விட்டது. கூட்டத்தில் அவசர கால நிதி திரட்ட முடிவானது. இந்தியா 10 மில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது. மற்ற உறுப்பு நாடுகள் இந்த அளவுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அலட்சியம் செய்யப்பட்ட  உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பேரபாயத்தை ஏற்படுத்தும் என முன் கூட்டியே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. ஆனால், பல்வேறு நாடுகளும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அசட்டையாக இருந்தன. அதற்கான விலையை இப்போது கொடுக்க நேர்ந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் 2020 ஜூலை - ஆகஸ்டில் நடைபெற இருந்தது. ஒலிம்பிக் தனது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என ஜப்பான் எண்ணியது.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் கொரோனா நெருக்கடி முற்றுகிற காலத்தில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 530 பில்லியன் டாலர் தொகையை ஊக்கவிப்பு தொகையாக கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது தொற்றுநோய் பேரிடரை எதிர்கொள்வதில் அரசு மெத்தனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. கடைசியில், வேறு வழியின்றி ஓராண்டுக்கு ஒலிம்பிக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவைச் சாக்காக வைத்து அதிகாரக் குவிப்பு

பல நாடுகளின் ஆட்சியாளர்களும் கொரோனாவைப் பயன்படுத்தி தன்னிச்சையாக அதிகாரக் குவிப்பில் ஈடுபடுகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ நீதிமனறங்களை மூடிவிட்டார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்க வேண்டியவர் இன்னும் பிரதமராக நீடிக்கிறார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் வெறும் அரசு உத்தரவுகள் மூலமே காலவரம்பின்றி ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றம் வழங்கி உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெரட் க்கு அவசர கால அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், சுய தனிமைப் படுத்தல் ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.

சிலியில் ஊரடங்கை அமல்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பொலிவியாவில் ராணுவத்தின் உதவியுடன் சட்ட விரோதமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்கள் கொரோனாவை முன்னிட்டு தேர்தலை ஒத்தி வைத்துவிட்டது. பிரேசில் வலதுசாரி பிரதமர் பொல்சனாரோ கொரோனா வைரஸ் சாதாரண சளிக் காய்ச்சல் போன்றதுதான். பயப்பட வேண்டியதில்லை. பொருளாதார நடவடிக்கைகள், வணிகம், வர்த்தகம் எல்லாம் அதுபாட்டுக்கு நடக்கட்டும் என்றார். மக்களும் அவரது கூட்டணி கட்சியினரும் இந்த தற்கொலை பாதையை தடுத்து நிறுத்தினர்.

கொரோனா தொற்றுநோயை குறைவாக மதிப்பிட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, இப்போது மனித உயிர் முக்கியமானது என்கிறது. இங்கிலாந்து அரசு சமூகத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக குறிப்பிட்ட அளவில் மக்களை இறந்து போக திட்டமிட்டது.

கடுமையான விமர்சனங்கள் எழுந்த பின்னர் சப்தமில்லாமல் அந்த முடிவைக் கைவிட்டது. இப்போது பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் மரணமடையலாம் என்று டிரம்ப் தெரிவித்தார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அமெரிக்க மக்கள் மடிந்தால் அது இதுவரை அமெரிக்கா கடந்த 70 ஆண்டுகளில் நடத்திய போர்களில் இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். 

ஆதாரம்: ஃப்ரண்ட்லைன்
ம.கதிரேசன்  

;