tamilnadu

img

மகாத்மா காந்தி கொலையின் பின்னணியில்... - கோ.நீலமேகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 33 ஆண்டுகள் தலைமையேற்று வழிநடத்திச் சென்றவர்; இத்தனை ஆண்டுகள் போராட்ட வாழ்வில், சத்தியம், அன்பு, அஹிம்சை - இவற்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு இயங்கியவர்; உலக மக்களால் மகாத்மா என்று கொண்டா டப்பட்ட காந்தியடிகள்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஏன்? எதற்காக? யார் இந்தக் கொலையாளிகள்?


காந்தியைக் கொன்றவர்கள் நோக்கம், இந்தியாவில் இந்து ராஷ்ட்ரம் அமைப்பது. இதற்கு, காந்தி தடையாக இருக்கிறார். காந்தியைக் கொலை செய்ய வேண்டுமென்று பூனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட சித்பவன் பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூடி சதி ஆலோச னையில் ஈடுபட்டனர். 1934ஆம் ஆண்டு பூனா நகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட வரவேற்பில் காந்தியடிகள் கலந்து கொள்ள சென்றபோது அவர் கார்மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

1944ஆம் ஆண்டு பஞ்சக்கனி என்ற இடத்தில் கத்தி யுடன் ஓர் இளைஞன் பாய்ந்தான். அவன் வேறு யாரும் அல்ல, நாதுராம் விநாயக் கோட்சேதான். 1944 செப்டம்பரில், 1946 ஜூன் மாதத்தில் 1948 ஜனவரி 20 அன்று தில்லியில் குண்டு வீசியது என முன்னதாக ஐந்து முறை கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆறாவது முயற்சியில்தான் காந்தி கொல்லப் பட்டார்.

கொலையாளிகள் 1. நாதுராம் கோட்சே, 2. நாராயண் ஆப்தே, 3. விஷ்ணு கார்கரே, 4. திகம்பர் பாட்கே, 5. கோபால் கோட்சே, 6. மதன்லால் பாவா, 7. சங்கர் கிருஸ்தய்யா, 8. தத்தரயா பார்சுரே, 9. விநாயக் தாமோதர் சாவர்க்கர், போலீ சாரிடம் பிடிபடாத கங்காதர தந்வளி, 10. கங்காதர ஜாதவ், 11. சூர்யதேஷ் சர்மா ஆகியோர். இந்தக் கொலை சதிக்கு மூளை யாக இருந்து இயக்கியவர், சாவர்க்கர். ஏழாவது குற்றவாளி யாக சேர்க்கப்பட்டார். இவர், இந்து மகா சபை தலைவராக செயல்பட்டவர். 1923-இல் இந்துத்துவா கோட்பாட்டை உரு வாக்கியவர். இன்றைய பாஜக ஆட்சியாளர்களுக்கு, ஆர்எஸ் எஸ் வகையறாக்களுக்கு ஞான குருவாகப் போற்றப்படுபவர். இவர், முன்பு இரு வேறு கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதியவர். கெட்டழிந்து போன பிள்ளையை தந்தையான வர் மன்னித்து ஏற்றுக்கொள்வது போன்று, மாட்சிமை பொருந்திய மன்னர் பிரான் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்றாடியவர். என்னை விடுவித்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு என்றும் விசுவாசமாக செயல்படுவேன், மீண்டும் அரசிய லில், பொது வாழ்வில் ஈடுபட மாட்டேன், அரசு விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்று செயல்படுவேன் என்றெல்லாம் எழுதிக் கொடுத்தவர்.

 

கொலையாளிகளில் திகம்பர் ராமச்சந்திர பாட்கே, அப்ரூவராக மாறி அளித்த சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவருக்கும், இவருக்கு வேலையா ளாக இருந்த சங்கர் கிருஸ்தய்யாவுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தது. கொலையாளிகளில் நாதுராம் விநாயக் கோட்சே, அவருக்கு உதவியாக செயல்பட்ட நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கொலை க்கு மூளையாக இருந்து செயல்பட்ட சாவர்க்கர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சியங்களை அரசுத்தரப்பில் தாக்கல் செய்யாததால், சந்தேகத்தின் பலன் அவருக்கு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சாவர்க்கரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக, அன்று உயர்பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தினர் என்பது பின்னர் வெளியானது. காந்தி கொலையைப் பற்றி விசாரிக்க, பின்னர் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் கமிஷன் விசாரணையில் பல விவரங்கள் வெளி வந்துள்ளன. குறிப்பாக, அன்று மத்திய அமைச்சராக இருந்த ஷியாம பிரசாத் முகர்ஜி, துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த வல்லபாய் பட்டேலு க்கு எழுதிய கடிதம்; அதனைப் பெற்றுக்கொண்டு பட்டேல், முகர்ஜிக்கு எழுதிய பதில் கடிதம்; அப்போது பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய்  அளித்த சாட்சியம்; சிறப்பு நீதிமன்ற நீதிபதி  ஆத்ம சரண் அளித்த தீர்ப்பில் உள்ள முரண்பட்ட வாசகங்கள் முத லானவை சாவர்க்கர் தப்பிக்க உதவியுள்ளன. நீதிபதி கபூர் தன்னுடைய அறிக்கையில், “எல்லா சாட்சிகளையும் மிகத் தீவிரமாக ஆழமாக ஆராய்ந்து பார்த்ததில், ஒரு விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரும் அவரது குழுவின ரும் காந்திஜியை கொலை செய்தனர் என்பதைத் தவிர மற்ற அனைத்தும் பொய் என்பது தெரிய வருகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய சாவர்க்கருக்குத்தான் பாஜகவின் வாஜ்பாய் ஆட்சியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரு வப்படம் திறக்கப்பட்டது. தற்போதைய மோடி ஆட்சி இவருக்கு, பாரத ரத்னா விருது வழங்க ஆயத்தமாகி இருக்கிறது. கொலையாளி கோட்சேவிற்கும் சிலை வைக்கும் நிலை.  இந்திய விடுதலை இயக்கத்தில் இந்துக்கள், இஸ்லா மியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள்,  பார்சிகள் என அனை வரையும் இணைத்தவர் காந்தி.

ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்பட்ட போது, “முதலில் என்னைக் கூறுபோடுங்கள், பிறகு தேசத்தைக் கூறு போடுங்கள்,” என்று கடுமையாக எதிர்த்து போராடி, பிரி வினையைத் தடுத்திட சகல முயற்சிகளையும் மேற் கொண்டார்.   பிரிவினைக்கு ஜின்னாதான் காரணம் என்ற நிலை யில் ஜின்னாவிடமே பேசினார். “ஜின்னாவே ஆட்சி அமைக்கட்டும், நாடு பிரிய வேண்டாம்,” என்று சொன்னார். ஆனால்  படேலும், நேருவும் காந்தியின் யோசனையை ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே பெரும்பான்மையி னர் காந்தியின் கருத்தை ஏற்கவில்லை. காந்தி பிரிவினை யை ஏற்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார்.

பிரிவினையை அடுத்து ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்ச்சியில் வரலாறு காணாத வன்முறைகள் அறங் கேறின. பல லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் சொல் லொண்ணா துன்பதுயரங்களால் கொந்தளிப்புக்கு உள்ளாயினர். இக் கொடுமைகளைக் கண்டு காந்தியடிகள் வேதனை யில் துடித்தார். மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதியை ஏற்படுத்திட கோரி கால வரையரையற்ற  உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் “காந்தியே செத்துபோ” என்று சத்தம் எழுப்பியவர்கள், பின்னர் காந்தி உயிரைக் காப்பாற்றக் கோரி திரளாகத் திரண்டனர். வன்முறையில் ஈடுபட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள், காந்தியிடம் அமைதியை ஏற்படுத்திட உறுதிமொழி எழுதிக் கொடுத்து, சகஜநிலை திரும்பியதை உறுதிப்படுத்திக் கொண்டபிறகு, காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மகாத்மா காந்தியின் இந்தக் கடைசி உண்ணாவிரதம், பாகிஸ்தானிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. காந்தி, பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காந்தியும், தன் உடல்நிலை சீரானதும் பாகிஸ்தா னுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். இத்தகைய நிலையில்தான், காந்தி, பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்கையில், பிரார்த்தனை மேடை அருகில், இந்துத்துவா மத வெறியன் கோட்சே, காந்தியின் காலைத் தொட்டு வணங்குவதுபோல் குனிந்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த ரிவால்வரால் மூன்று முறை சுட்டான்.

மகாத்மா மண்ணில் சரிந்தார்.

கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
தஞ்சை மாவட்டச் செயலாளர்

 

;