tamilnadu

img

எடப்பாடி போட்ட ‘எம்டன்’ குண்டு!

சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்றோடு (21.1.2020) முடியப்போகிறது. கடந்த ஜன. 9ஆம் தேதி இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் அரிய செய்தியை உதிர்த்து இருக்கிறார். அந்த அரிய செய்தியைச் சமூக வலைதளங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய புத்தகக் கண்காட்சி கருத்தரங்கு உரை ஒளிபரப்பானதிலிருந்து நாம் தெரிந்து கொண்டோம்: கேட்டோம்.தோழர் சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர் : ‘காவல் கோட்டம்’ எழுதி சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். ‘வேள்பாரி’யின் மூலம் பெரும் புகழ் அடைந்தவர். அவர்தான் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கில் பேசுமாறு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசுவதற்குரிய பொருளாக ‘கீழடி ஈரடி’ எனும் தலைப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்தப் பொருள் பற்றி அங்கே அவர் உரையாற்றவில்லை.

அதற்குப் பதிலாக தனது மன வருத்தத்தை அப்பேச்சில் அவர் சுட்டிக்காட்டினார். புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற சில நிகழ்வுகளை எடுத்துரைத்தார். அதாவது (1) நான் 25 ஆண்டுகளாக கண்காட்சிக்கு வருகிறேன். இதுவரை இல்லாத பல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் கண்காட்சியில் இடம்பெற்று இருக்கின்றன. (2) கருப்புச் சட்டை அணிந்தவர்களை விசாரித்து உள்ளேவிட்டனர். (3) மாநில அரசுக்கு எதிரான ஊழல் தொடர்புடைய புத்தகங்கள் விற்ற ஒரு பத்திரிகையாளரை வெளியேற்றிவிட்டனர். அவர் கடையும் அகற்றப்பட்டுவிட்டது. (4) அப்படி என்றால் எந்தத் தலைவர்கள் எழுதிய புத்தகமும் கண்காட்சியில் விற்க முடியாது. (5) உப்புப் போட்டுச் சாப்பிடுவதைப் பற்றி சமையல் கலை புத்தகத்தில் இருக்கும். அது மாநில அரசுக்கு எதிரானது என்று அவர்கள் சொல்லலாம். (6) இந்தப் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்த மாண்புமிகு முதல்வர், ‘அம்பேத்கர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது’ என்று பேசியிருக்கிறார். அம்பேத்கரை தெரிந்து கொள்ளாமல் அரசியல்வாதியாகி, முதல்வராகிவிட்டார் - எடப்பாடி? நமக்கு கிடைத்த பேறு இது!

தோழர் வெங்கடேசனின் பேச்சின் சாரமாக இந்த ஆறு புள்ளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியான அவரின் பேச்சில் இடம்பெற்று இருந்தது. அவர் பேச்சின் முதல் ஐந்து புள்ளிகளுக்குக் காரணம் மாநில அரசின் மார்க் அண்டனியின் மனைவியின் மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. அதற்கு நாம் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றோம். ‘எஜமான’ விசுவாசம் அந்த அளவுக்கு இருக்கிறது. சீசரை எதிர்த்தவர்களுள் சீசரோவும் ஒருவன். அவன் மாபெரும் பேச்சாளன். சீசரைக் கொன்றவர்கள் அவனைவிட ரோமை நேசித்தவர்கள். ஒற்றை மனிதனின் சர்வாதிகாரத்தை எதிர்த்தவர்கள். சீசருக்குப் பின் வந்த மார்க் அண்டனியும் அதனையே செய்தார். சீசரோ அதனை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னான். அண்டனி அவனைத் தூக்கிலே ஏற்றினான். அவன் சடலம் கிடத்தப்பட்டுக் கிடந்த போது நீட்டிக் கொண்டிருந்த நாக்கை அறுத்தாளாம் மார்க் அண்டனியின் மனைவி. சீசரோ பேச்சுரிமையின் முதல் தியாகி என்றே கருதப்படுகிறான்.இன்றைய தினம் மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க் அண்டனியின் மனைவி மனோபாவம் வளர்ந்து கொண்டு வருகிறது. அவற்றை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உரிய காலத்தில் திரண்டுத் தூக்கி எறிவார்கள். இவையெல்லாம் ஜனநாயக முறையில் அரங்கேறிவிடும்.

ஆனால், முதல்வர் எடப்பாடி ஒரு ‘எம்டன்’ குண்டைப் போட்டுவிட்டாரே. அம்பேத்கரைப் பற்றி ஒரு மிகப்பெரிய பொய்யை பேசி இருக்கிறாரே, இதனை எந்த ஏடுகளும் வெளியிடவில்லையே. வெளியிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்களா? ஏற்கெனவே அவர் ‘சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்’ என்று பேசி புகழ் அடைந்து இருக்கிறார். அதைவிடவும் மேலும் ஒரு கொடுமையை, நடக்காத ஒன்றை நடந்ததாகத் தனது பேச்சின் மூலம் எடப்பாடி - வெளியிட்டுவிட்டாரே. ஜன. 18ஆம் தேதி டிடி நெக்ஸ்ட், ‘பபாசி’, தோழர் வெங்கடேசனை குறை சொல்கிற செய்தியை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் முதல்வர் எடப்பாடிப் போட்ட ‘எம்டன்’ குண்டு பற்றிய செய்தி எதுவும் அதில் காணவில்லை. முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறாரே ‘என்ன செய்யப் போறீங்க?’ என்று தோழர் வெங்கடேசன் மக்களைப் பார்த்து கேட்டு இருந்தார். யாரும் அவர்களை ஒன்றும் இப்போதைக்குச் செய்துவிட முடியாது. எடப்பாடிக் கட்சியின் நிறுவனத் தலைவரே இப்படி எல்லாம் பேசியிருக்கிறார். அவர் காலத்தில் அவரைப் பற்றி மூன்று சர்ச்சைகள் எழுந்தன. அவர் பேசியதால் விளைந்தவை அவை.

(1) எம்டன் குண்டு போட்ட போது எனக்கு 7 வயது என்று எம்ஜிஆர் மேலவையில் பேசினார்.(2) எம்ஜிஆரின் அதிகாரப்பூர்வமான பிறந்த நாள் 17.1.1917 என்பது அதனால் கேள்விக்குறியானது.(3) அம்பேத்கர் அறுவை சிகிச்சையில் சிறந்த டாக்டர் என்று எம்ஜிஆர் பேசினார். இதுபோல பெரியதும் சிறியதுமான நிறைய விவரங்களைத் தவறாகப் பேசியது உண்டு. அதில் இந்த மூன்று தெறித்தவை.எம்டன் குண்டு போட்டபோது எனக்கு வயது 7 என்று எம்ஜிஆர் மேலவையில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பேசினார். முதல் உலகப்போர் (1914-1918) நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதன் தொடக்கத்தில் 1914, செப். 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது குண்டுவீசப்பட்டது. எம்டன் என்ற கப்பலில் வந்து வீசினர். அப்படிச் சேதமான பகுதியை இன்றும் கல்வெட்டுப் போட்டு வைத்துள்ளனர். அதைப் பற்றி கலைஞர் ‘இதோ ஒரு எம்டன் குண்டு’ எனத் தலைப்பிட்டு உடன்பிறப்புக்கு எழுதிய மடலில் (28.4.1979) முரசொலியில் எழுதி இருக்கிறார்.எம்ஜிஆர் தனது பிறந்த நாள் என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து இருப்பது 17.1.1917, 1914ல் எம்ஜிஆருக்கு 7 வயது என்று அவரே சொல்வதன் மூலம் அவரின் பிறந்த ஆண்டு 1907 என்றாகிறது. அவர் பிறந்த நாள் என்று தெரிவித்திருக்கிற ஆண்டோ 1917. இதையெல்லாம் தமது உடன்பிறப்புக்கு எழுதிய மடலில் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார்.

நாம் இதோடு இன்னொரு செய்தியையும் இங்கே கூடுதலாகச் சொல்ல விரும்புகின்றோம். 1950ஆம் ஆண்டு வெளியான குண்டூசி சினிமா பத்திரிகை தீபாவளி மலரில் எம்ஜிஆரின் பிறந்த நாள் 11.1.1916 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் பற்றி மோகன்தாஸ் எழுதிய புத்தகத்தில் அவரின் பிறந்த ஆண்டு 1911 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரின் பிறந்த நாளை 17.1.1917 என்று மாற்றி அமைத்தவர் வித்துவான் வே.இலட்சுமணன், அவர் எம்ஜிஆரின் ஆஸ்தானத்தைச் சேர்ந்தவர். பாலசோதிடம் நடத்தியவர். அவர்தான் கொல்லம் ஆண்டை மாற்றி அமைத்தவர் என்று அவரே எழுதியிருக்கிறார். அதைத்தான் எம்ஜிஆர் அதிகாரப்பூர்வமான பிறந்த நாளாக அரசுக்கு தகவல் கொடுத்தார்.

சென்னைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இதய ஆய்வுச் செய்யும் கருவி ஒன்றை இயக்கும் பகுதியை - பிளாக்கை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பேசினார். அதில் அம்பேத்கர் சிறந்த அறுவை சிகிச்சை செய்யும் ‘டாக்டர்’ என்று பேசினார். இந்தச் செய்தி நாளேடுகளில் எல்லாம் வந்தன. உண்மையில் டாக்டர் அம்பேத்கர் ‘ரூபாயின் சிக்கல்’ எனும் ஆய்வுக் கட்டுரையை எழுதி ‘டாக்டர் ஆப் சையின்ஸ்’ (D.Sc.,) எனும் பட்டத்தைப் பெற்றவர்.முதல்வர் எடப்பாடி, ‘அம்பேத்கருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது’ என்று பேசியதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. அவர் நிறுவனத் தலைவர் காட்டிய வழியில் அவர் பேசி இருக்கிறார். அவர்கள் ‘அம்மா’ காட்டிய வழியில் எல்லா வகையான திறமைகளைக் காட்டி அதிலும் அம்மாவைவிட விஞ்சக்கூடிய அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார்கள்.

இது ‘எடப்பாடி போட்ட எம்டன் குண்டு’ என்று தோழர் வெங்கடேசன் போல் உள்ளவர்கள் பயப்பட வேண்டாம். அவர்கள் இதைவிடவும் அதிகம் பேசக்கூடிய ஆள்களை வைத்து இருக்கிறார்கள். ஆகவே நாம் இந்த ஆட்சியைத் தூக்கியெறியும் விதத்தில் பணியாற்றுவதைத் தவிர இந்தப் பரமார்த்த குரு சீடர்களை வேறு என்ன செய்ய முடியும்? எடப்பாடி மற்றொரு குண்டு போடுவதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

நன்றி : முரசொலி தலையங்கம் 
(ஜனவரி 20.1.2020)

;