tamilnadu

img

இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினரை அவமதித்த பெங்கால் கிரிக்கெட் வாரியம்

முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் பெங்கால் அணியின் கேப்டனுமான தேவங் காந்தி தற்போது இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.  கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெங்கால் - ஆந்திரா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தைக் காணக் கொல்கத்தா  ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்குச் சென்றுள்ளார்.  பெங்கால் அணி தனக்குப் பழக்கப்பட்ட அணி என்பதால் அந்த அணியின் வீரர்கள் ஓய்வறையில் நுழைந்துள்ளார். தடையை மீறி நுழைந்ததாகக் கூறி தேவங் காந்தியை பிசிசிஐ ஊழல் தடுப்பு அதிகாரி சுமன் கர்மாகர் வெளியேற்றி னார். இந்திய கிரிக்கெட் துறையில் உயர் பொறுப்பில் உள்ள  தேவங் காந்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பெங்கால் அணியின் நட்சத்திர வீரர் மனோஜ் திவாரி,”தேசிய அணித் தேர்வாளருக்கு ஓய்வறையில் வேலையில்லை. தேவங் காந்தி அனுமதியின்றி உள்ளே வரக்கூடாது. நடைமுறை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்”என ஆவேசத்துடன் கொதித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ விரைவில் விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேவங் காந்தி செய்தது சரியா?  

கிரிக்கெட் துறையில் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் ஒரு மாநிலத்தின் கிரிக்கெட் அமைப்பின் முன்அனுமதி இன்றி வீரர்களின் அறைக்குச் செல்லக்  கூடாது. செல்லவும் முடியாது. அதாவது தேர்வான வீரர்கள், உதவிப் பணியாளர் தவிர ஓய்வறையில் யாரும் நுழையக்கூடாது. விதிமுறைகளை மீறி நுழைபவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.