states

img

அத்தியாவசியப் பொருள்களை பொது விநியோக முறையில் வழங்கிட வேண்டும் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பொது விநியோக முறையில் அளித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் மக்களவையில் திங்கள் அன்று பேசினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற விவாதத்தின்போது, பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் உணவுப் பொருள்களுக்கு விதித்திருந்த வரிக் கொள்கையைக் கைவிட்டது. கடந்த 75 ஆண்டுகளில் அரசி, கோதுமை, பருப்பு வகைகள், தயிர், பாலாடைக்கட்டி (பன்னீர்), இறைச்சி, மீன்,  வெல்லம் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் எதற்கும் வரி விதிக்கப்படவில்லை. இப்போது மோடி அரசாங்கம் ஜிஎஸ்டி வரி விதித்து நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தைக் கொண்டாடும் 75ஆவது ஆண்டில் (‘Azaadi ka Amrut Mahotsav’) நன்கொடை(‘gift’)யாக அளித்திருக்கிறது.

ஒன்றிய அரசாங்கம், ஜிஎஸ்டி வரிகளை, சுடுகாட்டுச் செலவினங்களுக்கும், மருத்துவமனை அறைகளுக்கும், எழுதும் மை போன்றவற்றிற்கும்கூட உயர்த்தி இருக்கிறது. ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தை வங்கியிலிருந்து வங்கிக் காசோலைகள் மூலம் திரும்பப் பெறுகிறார் என்றால் அதற்கும்கூட 18 சதவீதம் வரி விதித்திருக்கிறது.

நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் 7 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும், மொத்த விலைவாசிக் குறியீட்டெண் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில்தான் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது இவ்வாறு குரூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள வரிகள் மக்களின் வாழ்வாதாரங்களை மேலும் அழிவுக்குக் கொண்டு சென்றிடும்.

இவ்வாறு பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்திருக்கும் விலைவாசிகள் சாமானிய மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றி இருக்கின்றன. கோடானுகோடி மக்கள் வறிய நிலைக்கு ஆளாகி, பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் இவை மக்களின் துன்ப துயரங்களை மேலும் மோசமான நிலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் 70 விழுக்காடும், காய்கறிகளின் விலைகள் 20 விழுக்காடும், சமையல் எண்ணெய் விலைகள் 23 விழுக்காடும், தானியங்களின் விலைகள் 8 விழுக்காடும் உயர்ந்திருக்கின்றன. மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் கோதுமையின் விலை 14 விழுக்காடு உயர்ந்து, சாமானிய மக்கள் வாங்கமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

அரசு கோதுமை கொள்முதல் செய்வது வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒன்றிய அரசு சென்ற ஆண்டு கொள்முதல் செய்ததில் இந்த ஆண்டு பாதியளவு கூட கொள்முதல் செய்திடவில்லை. ஒன்றிய அரசு கொள்முதல் செய்வதற்கான குறியீடு 44.4 மெட்ரின் டன்கள் என்று நிர்ணயித்துள்ள நிலையில் அது 20 மெட்ரிக் டன்கள் கூட கொள்முதல் செய்திடவில்லை. தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வும், கோதுமை பற்றாக்குறையும் பணவீக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நிலக்கரிப் பற்றாக்குறை மின்சார உற்பத்தி செலவினத்தை உயர்த்தி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது சுமத்தப்பட்டுள்ள செஸ் வரிகள் மற்றும் சர்சார்ஜ் வரிகளை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்றும், குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை ரத்து செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். பொது விநியோக முறை மூலம் கோதுமை வழங்கப்படுவதை மீளவும் கொண்டுவரவேண்டும்.  பொது விநியோக முறை மூலம் கோதுமையை மீளவும் அளித்திட வேண்டும்.

தானியங்கள், சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் பொது விநியோக முறையை வலுப்படுத்திட வேண்டும்.

வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதந்தோரும் 7,500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கிட வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்திட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கிட மத்திய சட்டம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.    

;