states

முந்தைய நடைமுறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி,நவ.17- அரசு காலி பணியிடங்களை முந்தைய நடைமுறை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி பணி நியமனம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 10,500க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அரசு நிர்வாக செயல்பாட்டில் ஏற்படும் மந்த நிலை, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் நிர்பந்தம் காரணமாக தற்போது 1,060 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேற்படி பணி யிடங்களில் இட ஒதுக்கீடு முறை பல குழப்பங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.   இட ஒதுக்கீட்டிற்கு உட்படாத பொரு ளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியங்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ளன. பொது பிரிவில் உள்ள நலிந்த பிரிவினர் கணக்கெடுப்பு பற்றிய விவரம் அரசிடம் இல்லை. பொதுப்பிரிவில் உள்ள சமூகத்தினர் குறித்து எந்த கணக்கெடுப்பையும் அரசு நடத்த வில்லை. எனவே புதுச்சேரி அரசு ஆணை யம் அமைத்து இட ஒதுக்கீட்டில் இடம் பெறாத பொது பிரிவினர் குறித்து கணக்கெடுப்பை நடத்தவும், இட ஒதுக்கீட்டு அளவை தீர்மானிக்கவும், வரு மான வரம்பை தீர்மானிக்கவும் வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது அரசிதழ் பதிவு பெறாத காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 'பி' பிரிவு பணி யிடங்களை ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்ப அறிவிப்பு செய்துள்ளதை எதிர்க்கிறோம்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் ஓபிசி என்ற பொதுத் தன்மையில் இட ஒதுக்கீடு வழங்குவதால் வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தி னர் மீனவர்கள், இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் உள்ளிட்ட சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே அரசிதழ் பதிவு பெறாத ‘பி’  பிரிவு பணியிடங்கள் முந்தைய நடைமுறை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி பணி நியமனம் செய்ய வேண்டும். மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு காலி பணியிடங்கள் அனைத்தும் விரை வில் நிரப்பப்படும் என்று பேசிக்கொண்டே காகிதம் இல்லாத முறை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னணு அலுவல் முறை என வேலைவாய்ப்பை மட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் முடிவை மேற்கொள்வது அநீதியாகும். எனவே காலியாக உள்ள அனைத்து பணி யிடங்களை நிரப்ப வேண்டும், மாநில பணி தேர்வாணையம் அமைத்து அரசு உயர் பதவிகளிலும் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;