states

img

14 பேர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாகாலாந்து மக்கள் போராட்டம்

நாகாலாந்தில் ராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்ட 14 பேருக்கு நீதி கேட்டு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோன் மாவட்டத்தில் அதிகமுள்ள கொன்யாக் நாகா பழங்குடியினரின் அமைப்பான கொன்யாக் யூனியன், பொதுமக்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து, ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் நாகா பழங்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு அமைப்பான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பும், ஒத்துழையாமை போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஒத்துழையாமை போராட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, அனைத்து தேசிய கொண்டாட்டங்களிலிருந்தும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். ராணுவ திட்டங்களில் பங்கேற்க கூடாது.அவர்களின் அதிகாரப்பூர்வ அழைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. கிழக்கு நாகாலாந்து பகுதிக்குள் எந்தவொரு ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

மேலும், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் அறிக்கையில், மோன் மாவட்டத்தில் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 14 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த பாதுகாப்பு படையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நட்த்தியதாக டிசம்பர் 6-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியதை திரும்பப்பெற வேண்டும்.ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முழுவதுமாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் டிசம்பர் 16-ஆம் தேதி அனைத்து பழங்குடியினர் தலைமையகங்களிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் நாகாலாந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தை உடனடியாக அமைக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

;