states

img

குஜராத், உத்தரப்பிரதேசத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்தது

புதுதில்லி, மே 8- மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத்தில், 2019ஆம் ஆண்டை விட,வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.  மூன்றாம் கட்டத் தேர்தலில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கடைசியாக கிடைத்த புள்ளி விவரங்களின்படி, வாக்குப்பதிவு 64.4 சதவீதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டில் இந்தத் தொகுதிகளில் 67.33 சதவிகித வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன. 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது, ​​இங்கு 57.34 சதவீத வாக்குகள் பதிவாகின. 2019ஆம் ஆண்டு இதே தொகுதிகளில் 60.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,  இங்கு 58.98 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. 2019-இல் குஜராத்தில் 64.5 சதவிகித வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்காளர்களாக உள்ள மாநிலம் இது. காந்திநகர் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் மோடி வாக்களித்த நிலையில், அமித் ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இருவரும் பலமுறை வந்த போதிலும், வாக்காளர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. அசாமில் அதிகபட்சமாக 81.61 சதவிகித வாக்குகள் பதிவாகின. பீகாரில் ஐந்து தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 58.18 சதவிகித வாக்குகள் பதிவாகின. பல பூத்களிலும் வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்தனர். இறுதி அறிக்கை வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தில் சிறிது வித்தியாசம் இருக்கலாம். முதல் கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது 66.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின, 2019ஆம் ஆண்டை விட இது 4 சதவிகிதம் குறைவு. 88 இடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதிலும் 2019 ஐ விட சுமார் 3 சதவிகிதம் வீழ்ச்சி காணப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டத்திலும் 3 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. குஜராத்தைத் தவிர, அசாம், சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு மே 7 செவ்வாயன்று முடிவடைந்தது. சத்தீஸ்கர் (7 தொகுதிகள்) 71.06 சவிகிதமும், கோவாவில் (2 தொகுதிகள்) 75.20 சதவிகிதமும், கர்நாடகாவில் (14 தொகுதிகள்) 70.41 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

;