KITEX எனும் நிறுவனம் நினைவில் உள்ளதா?
இந்த நிறுவனத்தின் அதிபர் சபு ஜேக்கப் கேரளாவில் சில சிறிய நிறுவனங்களை நடத்தி வந்தார். பின்னர் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் இறங்கினார். .
இவர் “கிழக்கம்பலம் ட்வெண்டி ட்வெண்டி” எனும் அமைப்பை உருவாக்கி சிஐடியு உட்பட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் எதிராக ஊழியர்களை திரட்டினார். இந்த அமைப்பின் மூலம் சில உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றினார். 2021 தேர்தலில் மூன்றாவது அணியை கேரளாவில் அமைக்க முயன்றார். இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக புது இடதுசாரி சக்தி தோன்றிவிட்டது என்றெல்லாம் ஊடகங்கள் பேசியும் எழுதியும் தள்ளின. இவையெல்லாம் இடது ஜனநாயக அணியை பலவீனப்படுத்தும் முயற்சி என்பது கூறத்தேவை இல்லை. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நிறுவனம் கேரளாவில் தான் முதலீடு செய்ய முடிவு செய்திருந்த ரூ. 3500 கோடி திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தது. காரணம்? இடதுசாரி மாநில அரசு தங்களை துன்புறுத்துவதாக கூறியது. பின்னர் இந்த முதலீட்டை தெலுங்கானாவுக்கு மாற்றியது. இந்த செயல் அன்று இடது ஜனநாயக அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஊடகங்கள் இதனை ஊதிப் பெரிதாக்கின. இப்பொழுது இதே நிறுவனம் தெலுங்கானாவில் உள்ள பாரதிய ராஷ்ட்ர சமிதிக்கு ரூ.25 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் “லஞ்சம்” கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இடதுசாரிகளை எதிர்க்கும்பொழுது பரிசுத்தவான்களாக கட்டமைக்கப்படும் இவர்களின் உண்மை முகம் என்ன என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் வெளிவந்துள்ளது.