states

img

முதல்வருடன் பேசித் தீர்வு காணுங்கள்..!

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுதில்லி, டிச. 1 - “சட்டமன்றம் 2-ஆவது முறையாக நிறை வேற்றி அனுப்பிய பிறகும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்?” எனவும், “உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?” என்றும் தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “ஒப்புதல் வழங்காமல் சட்டமன்றத்திற்கு ஒருமுறை அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளு நருக்கு அதிகாரமில்லை” என்று கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்ப தற்கு முன்னதாக “இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து பேசி பிரச்சனைக்குத் தீர்வுகாணுங்கள்” எனவும் ஆளுநர் ஆர்.என். ரவியை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆளுநருக்கு காலவரம்பு  நிர்ணயிக்க வேண்டும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு கால கட்டங்களில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோ தாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை, நவம்பர் 10 அன்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா  ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா க்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது” என்று கூறியதுடன், “தமிழக அரசு அனுப்பிய கோப்புகளின் மீது முடிவெடுக்காதது ஏன்?”  என பதிலளிக்குமாறு ஆளுநருக்கு உத்தர விட்டது. மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆர்.என். ரவி இதையடுத்து, 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி, நவம்பர் 13 அன்று அவசர அவசர மாக தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி னார். ஆனால், நவம்பர் 18 அன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டிய தமிழ்நாடு அரசு, ஆளுநர் அனுப்பிவைத்த 10 மசோதாக் களையும் 2-ஆவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்தது. நவம்பர் 20 அன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.  ரவி, மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக் கிறாரா?; மூன்று ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று கேள்வி எழுப்பியது.

ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அவகாசம்

அத்துடன், “2-ஆவது முறையாக நிறை வேற்றப்பட்டால் அந்த மசோதாக்களுக்கு ஆளு நர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்ற  நிலையில், 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்பதையும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை யும் அறிய டிசம்பர் 1 வரை காத்திருக்கப் போகிறோம்” என்று கூறி விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் வெளி யாகின.

அரசியலமைப்பின் மீது அடுத்தத் தாக்குதல்

இந்த பின்னணியில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கு டிசம்பர் 1 - வெள்ளிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, “இந்த விவகாரத்தில் பிரச்சனை ஒரு ‘புதிய பரிமாணத்தை’ எட்டியிருப்பதாக - அதாவது, 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும்- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அவற்றை நவம்பர் 28  அன்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி யுள்ளார்” என்பதைத் தெரிவித்து, “இது அர சியலமைப்பின் மீது ஆளுநர் தொடுத்துள்ள தாக்குதலாக அமைந்துள்ளது” என்று வேதனை  தெரிவித்தார். அப்போது, “அரசியலமைப்புப் பிரிவு 200, மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. மசோதாவை திருப்பி அனுப்பவும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி கூறினார். ஆனால், “இரண்டாவது முறையாக நிறை வேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்தான் அளிக்க முடியும்; குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது” என்று அபிஷேக் மனு சிங்வி பதிலடி கொடுத்தார்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அதிகாரமில்லை

இந்த வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஏற்கெ னவேநிறைவேற்றப்பட்ட மசோ தாக்கள் அப்படியே நிறைவேற்றப் பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப் பட்டுள்ள நிலையில், அவற்றை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்..?” என்று அட்டர்னி ஜெனரலைப் பார்த்துக் கேட்டார். “அரசியலமைப்புச் சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுநரு க்கு மூன்று விருப்பங்கள் உள்ளன- அவர் ஒப்புதலை வழங்கலாம் அல்லது நிறுத்தலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்கு மசோ தாவை அனுப்பலாம். இதில் ஒன் றைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்படி ஒப்புதலைத் தடுத்து நிறுத் தும் முடிவை எடுத்த பிறகு, குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடி யாது. நான்காவது விருப்பம் அவ ருக்கு வழங்கப்படவில்லை. மசோதா வை நிலுவையில் வைத்ததாக கூறிய பிறகு, மறுபடியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளு நருக்கு அதிகாரம் இல்லை. அப்படி யிருக்க, ஆளுநர் விவகாரத்தில் நீதி மன்றம் தலையிட்டு தீர்ப்பளிக்க  வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்க ளா?” என்றும் கேட்டார். அதற்கு “மசோதாக்களுக்கான ஒப்புதலைத் தடுத்து நிறுத்தி னால், ஆளுநர் அவற்றை சட்டப்பேர வைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற தேவையில்லை” என்று அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி பதிலளித்தார். அப்போது, ‘பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கில் இந்த  விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்த்து வைக்கப் பட்டுள்ளது’ என்பதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். 

உத்தரவுக்கு காத்திராமல் பேசி முடிவெடுங்கள்

“மசோதாவை ஆளுநர் சட்டப் பேரவைக்கு திருப்பி அனுப்பத் தேவையில்லை என்றால், அவர் ‘மசோதாவை முற்றிலுமாக முடக்கி விடலாம்’ என்று அர்த்தம்; ஆனால், அதற்கு அரசியலமைப்பில் அதிகா ரம் வழங்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் எம்.பி., எம்எல்ஏ-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை வகிக்கிறார். அவருக்கு அரசியல மைப்பில் மிகவும் பரந்த அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசின் நியமனமாக இருக்கும் ஆளுநர், 200-ஆவது பிரிவில் வழங் கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களில் ஒன்றையே பயன்படுத்த வேண்டும். மசோதாக்களை ஒழித்துக் கட்ட வோ, மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி வைக்கவோ அவ ருக்கு எந்த அதிகாரமும் கிடையாது; ஒருவேளை அட்டர்னி ஜெனரல் கூறுவதுபோல, ஒப்புதலைத் தடுக்க ஆளுநருக்கு சுயேட்சையான அதிகாரம் உள்ளதா? என்பதை நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அதுவரை, “நீதிமன்றத்தின் தீர்ப்புக் காகக் காத்திருக்காமல், ஆளுநர் மட்டத்தில் முட்டுக்கட்டை தீர்க்கப்படு வதை உறுதிசெய்யுங்கள்” என்று அட்டர்னி ஜெனரலைக் கேட்டுக் கொண்டார்.  மேலும், “ஆளுநர் முதல்வருடன் அமர்ந்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டால் நாங்கள் பாராட்டு வோம். அவ்வாறு நடக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆளுநர் முதல்வரை அழைத்துப் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்றும் கருதுகிறோம்” எனக் கூறிய தலைமை நீதிபதி, வழக்கை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.