states

img

இந்தித் திணிப்பை அனுமதியோம்

மோடி அரசாங்கம் பல் வேறு விதங்களில் இந்தியை ஆட்சி மொழியாகத் திணி க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய நிகழ்வு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழி தொடர்பான நாடாளு மன்றக் குழு குடியரசுத் தலைவருக்கு ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக் கிறது. அந்த அறிக்கையில் கண்டுள்ள  பரிந்துரைகளில் ஒன்று பின்வருமாறு: “நாட்டிலுள்ள அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக  இந்தி இருக்க வேண்டும்.  ஆங்கிலத்தைப் பயன் படுத்துவது விருப்ப மொழியாக இருந்திட வேண்டும்.”  இது ஒன்றியக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-களி லிருந்து, மத்தியப் பல்கலைக்கழகங் கள் உட்பட அனைத்திற்கும் மற்றும் கேந்திரிய வித்யாலயாக்களுக்கும் பொருந்தும்.

இது அமல்படுத்தப்பட்டால்,  இதன்  பொருள், இந்தி பேசாத மாநிலங்களி லிருந்து வரும் மாணவர்கள் இக்கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வுகள் எழுதும்பட்சத்தில், இந்தி யிலும் தகுதி பெற வேண்டும், மற்றும் இந்தியைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாண வர்களுக்கு எதிரான பாகுபாடு இது  என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. இந்தி பேசாத மாநில அரசா ங்கங்களில் சில இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே சமயத்தில், அர சுத்தரப்பில் இந்தி பேசும் மாநி லங்களில் மத்தியப் பல்கலைக்கழகங் களில் இந்தியே கட்டாயமாக பயிற்று மொழியாக இருந்திடும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்று மொழியாக இருந்திடும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், இது பிரச்சனையைத் தீர்க்காது. இந்தி பேசும் மாநிலங்களில் மத்தியப் பல்கலைக் கழகங்கள் அல்லது ஐஐடி-களில் சேர விரும்பும் மாணவர்கள் இந்தியைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு இந்தியா முழுவதும் உள்ள  மத்தியப் பல்கலைக் கழகங்கள் இனி இந்தி பேசும் மாணவர்களுக்கு மட்டுமே அகலத் திறந்திருக்கும். இவ்வாறு தில்லியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனமோ அல்லது பனாராஸ் இந்து பல்கலைக் கழகம் போன்ற மத்தியப் பல்கலைக் கழகமோ இந்தி பேசாத மாணவர்கள் நுழைய முடியாத நிலை ஏற்படும். இதே நிலைமை ஆசிரி யர்களுக்கும் பொருந்தும். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டால், பின் அந்தக் கல்வி நிறுவனங்கள் அம்மா நில மாணவர்களுக்கு மட்டுமே பயன் படும். இதன் பொருள், இக்கல்வி நிறுவனங்களின் அகில இந்திய தன்மை அடிபட்டுப்போகும்.

நாட்டில் ஒரு ஜனநாயகப்பூர்வமான மொழிக் கொள்கை தேவை. அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழியாக சமமான அடிப்படையில் அங்கீ கரிக்கப்பட வேண்டும். ஆட்சி மொழிக் குழுவின் இதர பரிந்துரைகளும்கூட இந்த சமத்துவநிலையை சீர்குலைக்கின்றன. உதாரணமாக, அரசின் விளம்ப ரங்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இந்தி மொழி விளம்பரங்களுக்கு அளிக்கப்பட்டு வருவது தொடரவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.       

மாநிலத்தின் பிரதான மொழி உயர்கல்வி நிறுவனங்களிலும் மாநிலத்தின் நிர்வாகத்திலும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கோருவது சரியான நடவடிக்கைதான். இது மாநில அளவிலான கல்வி நிறுவனங்களுக்கும் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்று உத்தரப்பிரதேசத்தில் இந்தியும், தமிழ்நாட்டில் தமிழும் இதேபோன்றே இதர மாநிலங்களிலும் இருக்க வேண்டும். ஆனால், இதர மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில் இந்திக்குப் பிரதான முக்கியத்துவமும், அம்மாநிலத்தின் மொழிக்கு எதிரானப் பாகுபாடும் காட்டப்பட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சராக அமித்ஷா, ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற சிந்தனையைத் தொடர்ந்து உந்தித்  தள்ளிக்கொண்டிருக்கிறார். 2019இல் ‘இந்தி தினம்’ அன்று பேசிய தன்னுடைய முதல் பேச்சிலேயே கூறிய தாவது: “இந்தியா பல மொழிகள் பேசப்படும் நாடு. ஒவ்வொரு மொழியும் அதன் சொந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒட்டு மொத்த நாடும் உலகில் இந்த நாட்டின் அடை யாளமாக ஒரே மொழியைப் பெறுவது  முற்றிலும் அவ சியமாகும். ஒட்டுமொத்த நாட்டையும் இணைக்கக் கூடிய நூலாக  ஒரு இழை இருக்கும் என்றால் அது இந்தி  மொழி  மட்டுமே என்றும் அதுதான் அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும்.”

இது, ஆர்எஸ்எஸ் முழக்கமான “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு” என்பதை ஒட்டியே அமைந்திருக்கிறது. இந்தியா போன்ற பல மொழிகள், பன்முகபண்பாடு பல்வேறு வேற்றுமைகள் உள்ள ஒரு நாட்டில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மை ஏற்படவும், இந்தியை நிராகரித்திடவுமே இட்டுச் செல்லும்.

அக்டோபர் 12, 2022 - தமிழில்: ச.வீரமணி