states

உதயநிதி பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது!

புதுதில்லி, நவ. 29 - சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2 அன்று ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பேசினார். அப்போது, மனிதரில் சாதிய ஏற்றத்தாழ்வு, ஆண்- பெண் பாகுபாடு கற்பிக்கும் பழமைவாதச் சிந்தனையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் இந்துக்களை இனப்படுகொலை செய்யுமாறு பேசியுள்ளார் என்று பிரதமர் மோடி துவங்கி பாஜக தலைவர்கள் அனைவரும் வதந்தி பிரச்சாரத்தை மேற்கொண்ட னர். உதய நிதி மீது வழக்குகளையும் தொடர்ந்தனர். இந்நிலையில், ஜெகநாதன் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஒரு மாநில அமைச்சராக மக்கள் பொறுப்பில் உள்ள ஒருவர், அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசியுள்ளார். அவருடன் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் இருந்துள்ளார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என். பாட்டி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சச்சிதேவா என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. உதயநிதியின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், “தனிநபர் அளித்த புகாரின் பெயரில் அமைச்சர் மீது உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள், “அமைச்சர் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது” என்று கூறி, நிர்வாக நடைமுறையில் மீறல் இருந்தால், மனுதாரர்கள் அந்தந்த உயர் நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் உத்தரவிட்டனர்.