பிரதமர் மோடிக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்
புதுதில்லி, நவ. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரியின் ஐ-போன் கண்காணி க்கப்படுவதாக, அந்த ஐபோனைத் தயாரித்த ‘ஆப்பிள்’ நிறுவனம் மின்ன ஞ்சல் அனுப்பியிருக்கும் நிலையில், இதுதொடர்பான உண்மை நிலையைத் தெளிவுபடுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை ‘அரசு ஆதரவு ஹேக்கர்கள்’ குறிவைப்பதாக எம்.பி.க்கள் உட்பட 10 பேருக்கு, ஐபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமே மின்னஞ்சல் அனுப்பி எச்சரிக்கை செய்திருப்பது, முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு ‘ஆப்பிள்’ நிறுவனம் மின்னஞ்சல் செய்தி அனுப்பிய வர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்தியப் பொதுச்செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா, சிவசேனா (யுடிபி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் தலைவர் பவன் கெரா, மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோர் முக்கிய ஆளுமைகள் ஆவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு வந்த மின்னஞ்சல் செய்தியை ஸ்கிரீன் ஷாட்டுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதில் குறிப்பிட வேண்டியது, ஐபோன் மொபைலில் இருக்கும் தகவல்களைத் திருடுபவர்கள் மற்றும் ஒட்டுக்கேட்கும் அந்த நபர்கள் ‘அரசு ஆதரவு’ (ளுவயவந ளுயீடிளேடிசநன யவவயஉமநசள) பெற்றவர்கள் என ஆப்பிள் நிறுவனம் கூறியிருப்பதால், ஒன்றிய பாஜக அரசுதான் இந்த வேலைகளில் இறங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், 2019-இல் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டு மன்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதி பர்கள்... ஏன், சொந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களைக் கூட விடாமல், 300-க்கும் மேற்பட்டோரை வேவுபார்த்த குற்றச்சாட்டு மோடி அரசு மீது உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான குழு முன்பு கூட, மோடி அரசால், ‘நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை’ எனக் கூற முடியவில்லை. வேவு பார்ப்பதற்காக, இஸ்ரேலைச் சேர்ந்த காக்னிட் (Cognyte) மற்றும் செப்டியர் (Septidr) என தொழில்நுட்ப நிறுவனங்களிட மிருந்து மோடி அரசு சக்தி வாய்ந்த கண்காணிப்பு கருவிகளை வாங்கி யதாக லண்டனிலிருந்து வெளிவரும் ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ ஏடு அப்போது தெரிவித்தது. இந்த வேவு பார்க்கும் கருவிகள், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், சிங்டெல் (சிங்கப்பூர் நிறுவனம்) ஆகிய நிறு வனங்கள் மூலம் வாங்கப்பட்டு ஆழ்கடல் கேபிள் மையங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த வேவுபார்க்கும் கருவிகள் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்க ளின் குரல்பதிவு, குறுஞ்செய்தி, சமூக ஊடகங்களின் செயல்பாடு துவங்கி வீட்டின் படுக்கையறை வரை கண்கா ணிக்க முடியும் என்று செய்திகள் வெளி யாகின. ஆனால், மோடி அரசு அந்த விவகாரத்தை மூடி மறைத்தது. இந்தப் பின்னணியில்தான், தற்போது ஐபோன்கள் வேவு பார்க்கப் படும் விவகாரம் எழுந்துள்ளது. இதுபற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்த உடனேயே, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ஒன்றிய தகவல் தொடர்பு, மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார் என்றாலும், மறுபுறத்தில், “ஒரு நபர் தப்பான விஷயங்கள் இருக்கும் இணையப் பக்கத்திற்குச் செல்லும் போதுதான் இதுபோன்ற வைரஸ் தாக்குதல்கள் நடக்கும்” என்று ராகுல் காந்தியை குறிவைத்து, பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா போன்றோர் மூலம் குற்றச்சாட்டைக் கேலி செய்யும் மற்றும் திசைத்திருப்பும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது. இந்நிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பிரதமர் அவர்களே, நான், இத்துடன் என்னை எச்சரித்து ஆப்பிள் நிறுவனம் அனுப்பியிருக்கும் தகவலை அனுப்பியிருக்கிறேன். அதில் ஆப்பிள் நிறுவனம், “நீங்கள் பயன்படுத்தும் ஐ-போன் அரசாங்கத்தின் சார்பில் இணையதளங்களைத் தாக்குபவர்களால் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது,” என்று மிகவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறது. இந்தக் கடிதத்தை நான் நேற்றிரவு (திங்கள் கிழமை இரவு) பெற்றேன். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும். அனைவரையும் கண்காணித்திடும் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றாகும். என்னுடைய பணி ஒரு திறந்த புத்தகம். அதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. எனவே, இவ்வாறு கள்ளத்தனமாக வேவு பார்ப்பது நான் பயன்படுத்தும் கருவிகளில் தொலைதூரத்தில் உள்ள சாதனங்களின் மூலம் ஏதேனும் விஷயங்களை விதைத்து, பின்னர் அதன் அடிப்படையில் என்னை ஏதேனும் குற்றத்துடன் பொய்யாகப் பிணைத்திடப் பயன்படுத்திட முடியும். உங்களால் தலைமை தாங்கப்படும் இந்த அரசாங்கத்தின் முகமைகள் (ஐ.டி., இ.டி., சிபிஐ, என்ஐஏ.. போன்றவை) முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவரும் நிலையில் இதுபோன்ற (வேவு பார்க்கும்) சாத்தியக் கூறுகள் மிகவும் உண்மையாகும். நீங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு பிரதமராகப் பதவியேற்றீர்கள். ஆனால் அதனைச் செய்வதற்குப் பதிலாக, ஜனநாயகத்தையும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளையும் முற்றிலுமாக அழிக்கக்கூடிய விதத்தில் இது இருக்கிறது. இதனை ஏற்க முடியாது. இதுதொடர்பாக உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)