states

img

அதானியின் விஸ்வரூப வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது யார்?

உலகின் 609-ஆவது பணக்காரராக இருந்தவர் 2-ஆவது இடத்திற்கு முன்னேறியது எப்படி?

நாடாளுமன்றத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி ராகுல் காந்தி ஆவேசம்

புதுதில்லி, பிப்.7 -  2014-இல் உலக பணக்காரர் வரிசை யில் 609-ஆவது இடத்திலிருந்த அதானி, 2022-இல் 2-ஆவது இடத்திற்கு முன்னேறியது எப்படி? இதன் பின்னணி யில் இருப்பது யார்? பிதமர் மோடிக் கும் அதானிக்குமான தொடர்பு என்ன? என்று  ராகுல் காந்தி அடுக்கடுக் கான கேள்விகளை எழுப்பி, நாடாளு மன்றத்தை அதிரச் செய்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று துவங்கியது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி யிருப்பதாவது: இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது நாட்டு மக்களுடன் கலந்துரை யாடினேன். பெரியவர்கள், சிறிய வர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுடனும் உரை யாடுகிற வாய்ப்பு கிடைத்தது. அனை வரது கருத்தையும் நான் கேட்டேன்.  ‘அக்னி வீரர்கள்’ எனப்படும் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்களே கடுமை யாக எதிர்க்கின்றனர். 4 ஆண்டு காண்ட்ராக்ட் முறையை அவர்கள் ஏற்க வில்லை. ‘அக்னி வீரர்கள்’ எனப்படும்  ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமானது ஆர்எஸ்எஸ் மற்றும் அமித்ஷா தலை மையிலான உள்துறை அமைச்ச கத்தின் முடிவு. இது ராணுவத்தின் யோசனை அல்ல. ‘அக்னி வீரர்கள்’  திட்டத்தால் நாட்டின் ராணுவம் பல வீனமடைந்துவிடும் என முன்னாள் ராணுவத்தினர் அச்சப்படுகின்றனர். 

நாட்டின் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து மிகுந்த  கவலைப்படுகின்றனர். அவர்களி டம் பேசியபோது, பலரும் வேலையில் லாமல் இருப்பதாகவும், சிலர் ஊபர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வும் கூறினர். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊதியம் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை, பண வீக்கம் குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாட்டு மக்கள் பெரும் துயரத்தையும் துன்பத்தையுமே அனுபவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு, கேரளா துவங்கி இமாச்சல பிரதேசம் வரை எங்கெங்கும் அதானி பெயர்தான் ஒலிக்கிறது. இப்போது ஒட்டுமொத்த நாடும் அதானி குழுமம் பற்றியே பேசுகிறது. காஷ்மீரின் ஆப்பிள் முதல் துறைமுகம் விமான நிலையம், சாலை மேம்பாடு என எல்லாவகையான தொழிலிலும் அவரது பெயர்தான் பேசப்படுகிறது. 2014-இல் அதானி குழுமத்தின் மதிப்பு என்ன? 2023-இல் அதானி குழுமம் இப்படி பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றது எப்படி? 2014-இல்  ரூ. 66 ஆயிரம் கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2022-இல் ரூ. 11 லட்சத்து 58 ஆயிரம்  கோடியானது எப்படி? 2014-ல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்திலிருந்த அதானி 2022-ல் எப்படி 2வது இடத்திற்கு முன்னேறினார்? கடைசி 8 ஆண்டுகளில் மட்டும் 8  பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லி யன் டாலராக அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? 

அத்தனை தொழில்களிலும் அதானி குழுமம்தான் கால்பதிக்கிறது. அத்தனை தொழில்களிலும் அதானி குழுமம் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது எப்படி நடக்கிறது.. யார் அவ ருக்கு உதவுகிறார்கள்.. என்று மக்கள்  கேட்கிறார்கள். அதானி குழுமத்தின்  சொத்து மதிப்பு சில ஆண்டுகளி லேயே பல மடங்கு உயர்கிறது. அதானி குழுமத்தின் 8 முதல் 10 நிறுவனங் களும் விஸ்வரூப வளர்ச்சியை பெறு கின்றன. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை நாட்டு மக்கள்  அறிய விரும்புகிறார்கள். அதானி குழுமத்துக்கு நாட்டின் விமான நிலையங்கள் வலுக்கட்டாய மாக தாரைவார்க்கப்படுகின்றன. முன்  அனுபவம் இல்லாதவர்கள் விமான தொழிலில் இறங்க முடியாது. ஆனால் அதானிக்காகவே விதிகள் திருத்தம்  செய்யப்பட்டன. அதானி வசம் 6  விமான நிலையங்கள் ஒப்படைக்கப் படுகின்றன. நாட்டின் மிகவும் லாபகர மான மும்பை விமான நிலையமும் அவ ருக்கு அளிக்கப்படுகிறது. அதே போல், பாதுகாப்புத் துறையில் அதா னிக்கு எவ்வித முன் அனுபவமும் இல்லை. ஆனால், 126 போர் விமான  உற்பத்திக்கான ஒப்பந்தம் எச்ஏஎல் (HAL) நிறுவனத்தின் மூலம் அதானிக்கு வழங்கப்படுகிறது. அதானி குழுமம் டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். உடனே அதானி குழு மத்துக்கு அங்கு ஒப்பந்தம் கிடைக் கிறது. பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். உடனே எஸ்பிஐ வங்கி  அதானி குழுமத்துக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கிறது. பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார். உடனே வங்கதேசத்தின் மின் விநியோக ஒப்பந் தங்கள் அதானிக்கு கிடைக்கின்றன. இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்கான வெளி யுறவுக் கொள்கையாக மாற்றப்படு கிறது. அப்படியானால் அதானி குழுமத்துக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? 

குஜராத் முதல்வராக நரேந்திர  மோடி பதவி வகித்த காலத்தில் இருந்தே அதானியுடன் நெருக்க மாகவே இருந்தார். குஜராத்தின் மறு மலர்ச்சிக்கு உதவுகிறார். இப்போதும் பிரதமர் மோடிக்கு தோளோடு தோளாக நிற்கிறார்.  ஆனால், நரேந்திர  மோடி 2014-ல் பிரதமராக தில்லிக்கு வந்த பிறகுதான் அதானி குழுமம் நம்பவே முடியாத அளவிற்கான மாயாஜால  வளர்ச்சியை பெறுகிறது.  இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார். முன்னதாக ராகுல் காந்தியை முழுமையாக பேச விடாமல், பாஜக-வைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களும், எம்.பி.க்களும் தொடர்ந்து இடையூறு செய்ததுடன், அமளியிலும் ஈடுபட்டனர்.