புதுதில்லி, மே 29 - ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாகிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் ஞாயிறு அதிகாலை தில்லியில் இருந்து ஜெனிவா புறப்பட்டு சென்றார். தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசுகள் என முத்தரப்பு ஏற்பாடு தான் ஐஎல்ஓ. ஐநா-வில் 193-நாடுகள் அங்கம் வகிக்கிறது. அதில் 187-நாடுகள் ஐஎல்ஓ-வில் உறுப்பு நாடுகள்.
இந்த 187-நாடுகளின் அரசு மற்றும் தொழிலாளர்கள்-முதலாளிகள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச தொழிலாளர் மாநாடு(International Labour Conference-ILC) ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் மாதம் நடைபெறும். இந்த 110-வது சர்வதேச தொழிலாளர் மாநாடு மே 27 முதல் ஜூன் 11 வரை ஐஎல்ஓ தலைமையகம் உள்ள ஜெனிவாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து செல்லும் குழுவில் சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான ஆர். கருமலையான் மற்றும் மற்றுமொரு அகில இந்திய செயலாளரான உஷாராணி ஆகியோர் சிஐடியு சார்பில் இடம்பெற்றுள்ளனர். ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் தான் இந்த குழுவின் தலைவர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 13-பேரும் முதலாளிகள் சங்கங்களின் சார்பில் எட்டுப்பேரும் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை- குறிப்பாக இந்த மாநாடு பயிற்சியாளர்கள் குறித்து ஒரு புதிய ஐஎல்ஓ விதிகளை (Convention on Apprenticeships) விவாதிக்க இருக்கிறது.