states

img

கொடூரமான வழக்குகளை கொண்ட கோவா பாஜக வேட்பாளர்கள்!

பனாஜி, ஜன. 21 - கோவாவில் பிப்ரவரி 14 அன்று ஒரேகட்டமாக  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான 34 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் கள் பட்டியலை பாஜக வியாழக்கிழமையன்று வெளியிட்டது. இதில், பாஜக அறிவித்துள்ள 34 பேர்களில் 4 பேர் மீது கொடூரமான குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோவா தலைநகரான பனாஜி தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் அடானசியோ மான்சரேட். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டில், சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் தொடர்புடையவர். இதற்காக அவர் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இவருக்கு பாஜக மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளது.  அடானசியோ மான்சரேட்டின் மனைவி ஜெனிபர் மான்சரேட், தற்போதும் வருவாய்த் துறை அமைச்சராக உள்ளார். அவரும் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2008-இல் பனாஜி காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெனிபர் மீதும் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பாஜக-வில் இணைந்த கோவிந்த் கவுடா என்ற முன்னாள் அமைச்சர் மீதும்  குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டில், பழங்குடி யினர் நடத்திய போராட்டத்தின்போது கலகத்தை  உண்டாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவிந்த் கவுடா மட்டுமன்றி இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முன்னாள் அமைச்சரான  ரமேஷ் தாவாட்கருக்கும் பாஜக தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது.