states

அதானியின் பங்குச் சந்தை ஊழல் குறித்த விவாதத்திற்கு மோடி அரசு மறுப்பு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் அதானியின் ஊழலை விசாரிக்க வேண்டும்!

செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் அதானியின் ஊழலை விசாரிக்க வேண்டும்! செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன கார்கே ஊடகங்களிடம் பேசினார். அப்போது, “கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், சந்தை மதிப்பை இழக்கும் நிறுவனங்களில் (அதானி குழுமங்களில்) எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த  பிரச்சனை குறித்து விவாதிக்க நாங்கள் அளித்த ஒத்திவைப்பு நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. முக்கியமான பிரச்சனை களை எழுப்பும் போதெல்லாம் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள ஏழை மக்களின் பணம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விவாகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் முதலீடு செய்துள்ள மக்கள் தங்களின் பணங்களை இழக்கின்றனர். உண்மையை கண்டறிய  நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என்று மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.

புதுதில்லி, பிப். 2 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது நாள் கூட்டத்தில், கவுதம் அதானியின் பல லட்சம் கோடி  ரூபாய் மதிப்பிலான பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பான பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலை க்கும் வகையில் நடந்துள்ள, அதானியின் இந்த ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, அதானி தொடர்பான விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்காததால், எதிர்க்கட்சி கள் சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுமையாக முடங்கின. 

வியாழனன்று குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்குவதாக இருந்த நிலையில், பாஜக அரசின் பிடிவாதத்தால், இரு அவைகளிலும் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’, கடந்த  ஜனவரி 24 அன்று ஆய்வறிக்கை ஒன்றை வெளி யிட்டது. அதில், மேலும், அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன்  டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) என்றும், இதில், 100 பில்லியன் டாலர் (ரூ. 8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தையில் மோசடி செய்தும், போலி நிறு வனங்கள் மூலமாகவுமே அதானி நிறுவனம் முறை கேடாக சொத்து மதிப்பை அதிகரித்துள்ளது. மேலும்,  போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளது என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியது. தங்களின் குற்றச்சாட்டு தொடர்பாக அதானி குழுமம் வழக்கு தொடர்ந்தால், குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் தயார் என்று அறிவித்தது. மேலும், அதானி தேசியக்கொடியைப் போர்த்திக் கொண்டு நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்; உண்மையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானி குழுமம் முக்கியமான தடைக் கல்லாக இருக்கிறது என்றும் கடுமையாககுறிப்பிட்டது. இதனால், அதானி குழுமம் தொடர்பான நிறுவ னங்கள், பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சந்தை மதிப்பை இழந்துள்ளன. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான ஜனவரி 24 அன்று உலகின் 2-ஆவது பணக்காரராக இருந்த கவுதம் அதானி, அறிக்கைக்குப் பின்னர், தற்போது உலகின் 16-ஆவது பணக்காரர் என்ற  இடத்திற்கு வீழ்ந்துள்ளார். அதானி நிறுவனங்களும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.

அதானி நிறுவனங்களில், எல்ஐசி போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் சுமார் ரூ. 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ள நிலையிலும், ஸ்டேட் பாங்க் இந்தியா போன்ற நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கிகள் அதானி நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை கடனாக அள்ளிக் கொடுத்திருக்கும் சூழலிலும், அதானி குழும பங்குகள் சரிவால், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும் அச்சம் எழுந்துள்ளது.  இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்திய மக்களை ஏமாற்றியும், கொள்ளையடித்துமே அதானி தனது சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டார் என்று கூறப்படும் நிலையில் அதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-ஆவது நாள் கூட்டம் வியாழனன்று காலை துவங்கிய நிலையில், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தனித்தனியாக நடைபெற இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தை கிளப்பின.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஒத்திவைத்து விட்டு, தற்போது எரிந்து கொண்டிருக்கும் பிரச்ச னையான அதானியின் பங்குச்  சந்தை  முறைகேடு கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சிவதாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  எம்.பி. பினோய் விஸ்வம், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பாரத் ராஷ்டிர  சமிதி எம்.பி. நம நாகேஷ்வர ராவ்,  விசிக  எம்.பி.  ரவிகுமார் உள்ளிட்டோர் நோட்டீஸ் வழங்கினர். “நாடாளுமன்ற விதி 267-இன் கீழ் அதானி குழும பங்குகளின் சரிவுகள் குறித்து விவாதம் நடத்த  வேண்டும்; இது மிகவும் அவசரமான பிரச்சனை; அதானி குழுமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நாட்டு மக்களின் பணம் சூறை யாடப்படும் ஆபத்தில் இருக்கிறது” என்று எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் தங்களின் நோட்டீசில் குறிப்பிட்டிருந்த னர். ஆனால், ஜாம்பியாவில் இருந்து வந்திருந்த நாடாளுமன்ற குழுவை வரவேற்ற மக்களவை சபாநா யகர் ஓம் பிர்லா, நேரடியாக கேள்வி நேரத்திற்குள் சென்றார். அப்போது, அதானி குழுமம் தொடர்பான  பிரச்சனையை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகர் அதற்கு அனுமதிக்காமல், வெறுமனே அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். இதனால் ஆவேசமடைந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பிற்பகல் 2 மணி  வரை மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்  பிர்லா அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும்  எதிர்க்கட்சிகள் அதானி ஊழலை முன்வைத்து முழக்கங்களை எழுப்பியதால், நாடாளுமன்றம் நாள்முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
 

;