states

தீண்டாமை கொடுமையை வேரறுக்க அனைத்து சமூக மக்களையும் இணைத்துப் போராடுவோம்

காதல் ஒவ்வொருவரின் பிறப்புரிமை. நாம் வழிபடும் முருகன் காதலித்தால் கொண்டாடுகிறோம். கோவில் கட்டுகிறோம். சினிமாவில் காதலித் தால் கை தட்டுகிறோம். ஆனால் நிஜத்தில்  பழமைச் சிந்தனை நம்மை ஆக்கிர மித்துள்ளது. காதல் விரோதிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிற்கும். காதல் தம்பதியர்க்கு பாதுகாப்புப் படையாக நிற்கும். பட்டியலின சாதியினரைக்கூட ஒன்றாக இருக்கக்கூடாது என மிக நுட்பமாக பிரித்து வைத்துள்ளார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல 19 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியர்கள் நிலை இருந்தது. அதனால் உள்ஒதுக்கீடு கோரிக்கை வைத்தோம். போராடினோம். கலைஞர் 3 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக் கையை நிறைவேற்றினார். அதற்காக தமி ழகத்தில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் சென்றார் தோழர் என்.வரதராஜன். அவ ருக்கு ஆண்டுதோறும் கிராமங்களில் நினைவு அஞ்சலி செலுத்த வேண்டும். போராட்ட வரலாற்றை நினைவு கூரவேண்டும். நிலம் என்பது கிராமப்புற மனிதனின் வாழ்வாதாரம். தமிழகத்தில் பட்டியலின மக்கள் 17 விழுக்காடு உள்ளனர். இவர்களின் கையில் 7 சதவிகித நிலம் தான் உள்ளது.  மற்றவர்கள் தினக்கூலிகளாக, அத்துக்கூலி களாக, குத்தகை விவசாயிகளாகத் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர். 5பேர் கொண்ட குடும்பம் 15 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது என நில உச்சவரம்புச் சட்டம் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகும்  நிலைமை இதுதான். 

மேற்கு மண்டலத்தில் பட்டியலின மக்களிடம் வெறும் 2 விழுக்காடு நிலம் மட்டும் தான் உள்ளது. அம்மக்கள் அகதிகளைப் போல வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.   கேரளம், மேற்கு வங்கத்தில் நில உச்ச வரம்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு, நிலம் பிரித்து  வழங்கப்பட்டுள்ளது. இங்கும் நிலம் பிரித்து வழங்கப்பட வேண்டுமென்றால் அடிப்படை அரசியல் மாற்றம் நடைபெற வேண்டும். அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் பஞ்சமி நிலம். அந்த நிலமும் இன்று அவர்கள் கையில் இல்லை. எனவே நிலத்தை பிரித்துக் கொடுப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும். தலித் மக்களில் ஒரு சிறு பகுதியினர் படித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கோடி களை வங்கிகள் தொழில் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தவும் கடனாக வழங்கு கின்றன. இதில் பட்டியலினத்தவர்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்று  கேட்டால் இல்லை. ஏன் கொடுக்க மறுக் கிறார்கள்? திருப்பூரில் பின்னலாடைக்கும், பெருந்துறையில் விசைத்தறிக்கும் அரசு இடம் வழங்கி, அதில் 100 விசைத்தறிகள் நிறுவப்பட்டன. ஆனால் அது பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்டது என்பதால், 25 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. 

துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி கணிசமான உயிர்கள் பலியாகி வருகின்றன. ஒட்டுமொத்த சமூகத்தில் கழிவறையை சுத்தம் செய்வதற்கென்றே ஒரு சமூகத்தை வைத்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்தால் வேறு ஆட்களைக் கொண்டு வேலையை நடத்துவார்கள். துப்புரவு தொழிலாளி வேலை நிறுத்தம் செய்தால் வேறு சாதியினரைக் கொண்டு கழிவறை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்வார்களா? துப்புரவுத் தொழிலாளர் களுக்கு அனைவரும் நன்றிக் கடன் பட்டவர்கள். ஏதாவது விடிவு காலம் பிறக்காதா என்று இருப்பவர்களுக்கு தமிழக முதல்வர் நன்றிக் கடனாக இக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். உரிமைகளை வென்றெடுப்பதற்காக பட்டியலின மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது. இம் மக்க ளுக்கான விடுதலைக்கு பட்டியலின மக்கள் மட்டும் போராடினால்  இயலாது. தீண்டாமை வேர் அறுக்கப்பட இதர சமூக மக்களையும் இணைத்து போராடுகிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்.

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் கோரி ஈரோட்டில் நடைபெற்ற  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு மாநாட்டில் சிபிஎம் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து...

;