புதுதில்லி, ஜூன் 13 - எல்ஐசி நிறுவன பங்குகள் விலை தொடர்ந்து சரிவில் செல்வது தங்களுக்கு கவலை தருவதாக ஒன்றிய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (DIPAM) செயலாளர் துகின் காந்த பாண்டே போலிக் கண்ணீர் வடித்துள்ளார். இது தற்காலிகமான சரிவுதான் என்றாலும், பங்கு முதலீட்டாளர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் ஆறுதல் கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்தது. எனினும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டதால் எல்ஐசி பங்கு வெளியீட்டை தள்ளிப்போட்டுக் கொண்டே போனது. பின்னர் ஒருவழியாக, எல்ஐசி ஆரம்ப பொதுச்சலுகை அடிப்படையில், மே 4 முதல் மே 9 வரை எல்ஐசி பங்குகள் விற்பனையை நடத்தியது. ரூ. 902 முதல் 949 வரையிலான விலையில் மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டன. இதில் ஊழியர்களுக்கு 5 சதவிகிதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவிகிதமும் பங்குகள் ஒதுக்கப்பட்டு, தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன. பின்னர் அவை மே 12-ஆம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ. 949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த விலையைக் காட்டிலும் 8 சதவிகிதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு திறக்கப்பட்டது. இது எல்ஐசி பங்குதாரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து சரிந்து வந்த எல்ஐசி பங்கின் விலை தற்போது 708 ரூபாய் என்ற அளவு வரை குறைந்துள்ளது. இதனால் எல்ஐசி பங்குகளை ஆர்வத்துடன் வாங்கிய முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். இவர்களுக்குத்தான் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (DIPAM) செயலாளர் துகின் காந்த பாண்டே ஆறுதல் கூறியுள்ளார். மேலும், செய்வதையும் செய்துவிட்டு, எல்ஐசி பங்கு மதிப்பு சரிவு தனக்கு கவலையளிப்பதாக போலிக் கண்ணீர் விட்டுள்ளார்.