சென்னை, அக்.23- தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 1,437 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,537 பேருந்துகளை கடந்த 21-ஆம் தேதி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3,300 பேருந்துகள் இயக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 65 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல், சனிக்கிழமையன்று சென்னையிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன் 1808 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 3 லட்சத்து 94 ஆயிரத்து 440 பேர் பயணம் செய்துள்ளனர். ஒட்டு மொத்தமாக கடந்த 2 நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 21-ஆம் தேதி சென்னையிலிருந்து 1350 ஆம்னி பேருந்துகளில் 48 ஆயிரத்து 600 பேரும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல 510 ஆம்னி பேருந்துகளில் 18 ஆயிரத்து 360 பேரும் பயணம் செய்துள்ளனர். அதேபோல், சனிக்கிழமையன்று சென்னையிலிருந்து 902 ஆம்னி பேருந்துகளில் 32,500 பயணிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல 486 ஆம்னி பேருந்துகளில் 17 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகளில் இரண்டு நாட்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 960 பயணம் மெற்கொண்டுள்ளனர். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுபோன்ற விதிமீறல்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர்.