states

அனைத்து மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் வகையில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை திருத்துக!

சென்னை,டிச.23-  அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர் களும் விண்ணப்பிக்கும் வகையில் ஜே.இ.இ  நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை திருத்த  வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  ஒன்றிய அரசின் தொழில்நுட்பக் கல்வி  நிறுவனங்களுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்களில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அலட்சியப்போக்கை சரிசெய்து,  அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.  ஒன்றிய அரசின் கீழ் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும்  ஐ.ஐ.ஐ.டி. ஆகிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பல்லாயிரக்கணக்கான நிதி ஒதுக்கி நடத்தப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் நுழைவதற்காக தனியாக ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 12 ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நுழைவுத் தேர்விலும் வென்றால்தான் இந்த கல்வி நிறுவனங்களில் நுழையவே முடியும். மேலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை அமலாக்குவதிலும் இந்த நிறுவனங்கள் பின் தங்கியே உள்ளன.

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி யடைந்த தமிழக மாணவர்கள் இந்நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க காத்திருந்த நிலையில் அது சாத்தியமில்லாததாக மாறி யுள்ளது. காரணம் ஜே.இ.இ ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் களும் கேட்கப்படுகின்றன. இரண்டு ஆண்டு களுக்கு முன் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்  இயங்க வில்லை. மேலும் கட்டிடங்கள் பெருந்தொற்றை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டன.  இதனால் பொதுத் தேர்வுகள் நடத்துவது சாத்தியமாகவில்லை. ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள் மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில கல்வி நிறுவனங்களில் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களால் அதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. எனவே நெருக்கடி சூழலை கணக்கில் கொண்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு, தேர்ச்சிக்கான சான்று மட்டும் தரப்பட்டது. அந்த மாணவர்களே தற்போது 12ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்து,  நுழைவுத் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர்.

மாநிலத்தின் இத்தகைய எதார்த்த சூழ்நிலைகளை கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசு, ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தை பத்தாம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் விதமாக அமைத்துள்ளது.  இதனால் தேர்வுக்கு தயாரானாலும், நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பாடத்திட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருமே இச்சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும். இதுகுறித்து, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அரசுத் தேர்வு துறை மூலமாக தேசிய தேர்வு  முகமைக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளது போல் உடனடியாக ஒன்றிய அரசுக்கு கடிதம்  எழுதிட வேண்டுமெனவும், ஒன்றிய அரசு உடன டியாக ஜே.இ.இ. தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்து, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இல்லாவிட்டாலும் நுழைவுத்தேர்வு எழுதும் நிலையை ஒன்றிய அரசு உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.