திருவனந்தபுரம், ஏப்.25- கேரளாவில், 2026ஆம் ஆண்டுக்குள், 20 லட்சம் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும், ‘கேரள நாலெட்ஜ் எகனாமி மிஷன்’ திட்டத்துக்கான கணக்கெடுப்பு, மே, 8ஆம் தேதி முதல், 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கேரள உள்ளாட்சித் துறையின் தலைமையில் ‘எனது வேலை எனது பெருமை’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேலை தேடுவோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வார்டு அளவிலான கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பஸ்ரீ மிஷன் இதற்கு உதவும். 18 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்ட வேலை தேடுபவர்களிடமிருந்து வீட்டுச் சந்திப்புகள் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டு, கேரள நாலெட்ஜ் எகனாமி மிஷனின் டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்பில் சேர்க்கப்படும். டிஜிட்டல் பணியாளர் அமைப்பு (Digital Work Force System) என்பது வேலை தேடுபவர்களையும் முதலாளிகளையும் இணைப்பதாகும். கணக்கெடுப்புக்காக மாநிலம் முழுவதும் 1070 சமூக தூதர்களை குடும்பஸ்ரீ அமைப்பு நியமிக்கும். தற்போதுள்ள தன்னார்வலர்களையே தூதர்களாக்கலாம். கேரளா தகவல் இயக்க தொழில்நுட்ப உதவியாளர்கள் தொழில்நுட்ப உதவி மற்றும் செல்பேசி செயலி பயன்பாடு குறித்து பயிற்சி அளிப்பர். கணக்கெடுப்புக்காக 30 நாட்களுக்குள் ஊராட்சி, வார்டு, கோட்ட அளவில் அமைப்புக் குழுக்கள் அமைக்கப்படும். வார்டு/பிரிவு உறுப்பினர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு கணக்கெடுப்பு தொடங்கும். வார்டு அளவிலான துவக்க விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதர வழிகாட்டுதல்
பஞ்சாயத்தில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையை வார்டு அடிப்படையில் தயாரிக்க வேண்டும். தகவல் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்பு தலைமையில் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும். தொழில் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.