‘ஆளுநரை ஆதரிப்பவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள்’
ஓசூர், பிப்.16- ஆளுநரை ஆதரிப்பவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். ஒசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநரை ஆதரிப்பவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள். மனசாட்சி உள்ள எவரும் ஆளுநரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். தேர்தல் பத்திரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழ்நாடு முதல்வர் வரவேற்றுள்ளார்” என்றார். மற்றொரு கேள்விக்கு, ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதில் காட்டும் முனைப்பு விவசாயிகள் போராட்டத்தை தீர்ப் பதில் காண்பித்தால், விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டுவிட முடியும் என தூத்துக் குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கூறியுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
12 ஆம் வகுப்பு தேர்வு: பிப். 20 இல் நுழைவுச்சீட்டு
சென்னை,பிப்.16- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 அன்று தொடங்குகிறது. இத்தேர்வை 7.15 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பிப். 20 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று ஆன்லைன்-போர்டல் என்ற வாசகத்தினை கிளிக் செய்து user ஐ.டி. பாஸ்வேர்டு கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பிப். 19 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம். 11 ஆம் வகுப்பு நிலுவை (அரியர்) மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டும் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை உயர்வு
சென்னை,பிப்.16- தங்கத்தின் விலை ஒரு நாள் அதிகரிப்பதும் மீண்டும் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. வியாழனன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,740க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியன்று (பிப்.16) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.46,080க்கு விற்பனை யானது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.50,272 விற்பனை யானது.