திருவனந்தபுரம், மார்ச் 25- தேர்தல் பிரச்சாரத்திற்கு மத அடையாளத்தை பயன்படுத்தி ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரன் கடுமையான விதி மீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. கேரளத்தில் உள்ள அட்டிங்கல் மக்களவைத் தொகுதி யில் ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியாக பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி சிலையின் படத்துடன் மோடி மற்றும் வி.முரளிதரன் படங்கள் இடம்பெற்றுள்ளன. கடுமையான இந்த தேர்தல் நடத்தை விதி மீறலுக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ஜெயன்பாபு இந்த புகாரை அளித்துள்ளார். எதிர்ப்புக்குள்ளான பதாகை உடனடியாக அகற்றப்பட்ட நிலையில் தனக்கு இது குறித்து தெரியாது என வி.முரளீதரன் மழுப்பியுள்ளார். ஆனால், சமூக ஊடகங்களில் முரளீதரன் ஆதரவாளர்களும் சங்பரிவாரங்களும் பெரிய அளவில் இந்த பதாகையை தேர்தல் பரவசத்துடன் பரப்பி உள்ளனர்.