states

காவல்துறைக்கான 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் ஜூன் 20 அன்று துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் இறுதி நாளான ஜூன் 29 அன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார். அப்போது, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்  பணிகள் துறையின் சார்பில் 100 புதிய அறிவிப்புகளை முதல மைச்சர் வெளியிட்டார். அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு புதிய காவல் நிலையம்!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம் புதூர், மதுரை திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம்  காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணி யாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும். காஞ்சிபுரம், விழுப்புரம் சேலத்தில் சிறப்பு பிரிவு!  மத அடிப்படைவாதம் குறித்த சவால்களை சிறப்புப் பிரிவு எதிர்கொள்ளும் வகையில் காஞ்சிபுரம் விழுப்புரம் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் மூன்று பிரிவுகள் உருவாக்கப்படும்.  கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுத் துறையில் இரண்டு தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். 

விபத்தில்லா கோவை மாநகராட்சி! 

கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச  ரூபாய் செலவில் புதிய ஆய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

மெரினா கண்காணிப்பு திட்டம்! 

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும். ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும். சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். ரூ. 4. 64 கோடியில் மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 1 கோடியில் சென்னை பெருநகர காவல் ‘பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள்’ அமைக்கப்படும். போதைப் பொருட்களைக் கண்டறியவும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கவும் ரூ. 53 லட்சத்தில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்படும். இணையதள குற்றம், பொருளாதாரக் குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ‘சென்னை - பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்’ எனும் தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்படும்.


 

;