states

ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனம் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

புதுதில்லி, செப். 25 - ஆகம கோயில்களில் அர்ச்சகர் நிய மனம், இடமாறுதல் பணிகளுக்கு இடைக்காலத் தடைவிதித்து, தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் என்ற பெயரில் ஜி. பாலாஜி என்பவர் சார்பில், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்று தக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ரிட் மனு  நீதிபதிகள் போபண்ணா, எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. ஜி.பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜ ரானார். அவர், தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி, ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்து வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதமானது வாதிட்டார். ஆகம கோவில்களில் அர்ச்சகர் நிய மனத்தின் போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடுமாறும் வலியுறுத்தினார். இதனைப் பதிவு செய்து கொண்ட  உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையையே தொடருமாறும், சிவாச் சாரியார்கள் சங்கத்தின் மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறும் இந்து  சமய அறநிலையத்துறைக்கு உத்தர விட்டுள்ளனர்.

முந்தைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு

“ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகர் களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், கடந்த ஜூலை 26 அன்று தீர்ப்பு வழங்கினார். “ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். இதற்கு சாதி தடையாக இருக்காது” என்றும் கூறினார். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில், முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் தொடுத்திருந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டு இருந்தது.  இந்த உத்தரவுக்கு சென்னை  உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதி கள் அமர்வும் உச்சநீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டன. எனினும் சிவாச்சாரியார்கள் சங்கம் என்ற பெயரில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு, அதில் இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது.