திருச்சிராப்பள்ளி, செப்.10 - தேசிய அளவில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை கள் அடிப்படையிலான ‘தூய்மை காற்று’ கணக்கெடுப்பில் திருச்சி மாநகராட்சி தமிழகத்தில் முதலிட மும், தேசிய அளவில் 6வது இடமும் பெற்றுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்ச கம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரி யத்துடன் இணைந்து, 2025-26 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காற்று மாசுபாட்டை 40 சதவீதம் வரை குறைப்பதற்காக ‘தேசிய தூய்மை காற்று திட்டம்’ (என்சிஏபி) திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதனொரு பகுதியாக, நாடு முழுவதும் ‘ஸ்வர்ச் வாயு சர்வேக்ஷன்’ (தூய்மை காற்று கணக்கெடுப்பு) நடத்தியது. இதில், நாடு முழுவதும் உள்ள 131 நகரங்கள் பங்கேற்றன. அவை, மக்கள் தொகை அடிப்படை யில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 47 நகரங்கள், 3 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட 44 நகரங்கள், 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் என 3 குழுக்களாக பிரிக்கப்பட்டன. இந்நகரங்களில் காற்றின் தர அளவீடு அடிப்படையில் இல்லாமல், வெவ்வேறு களங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த நகரங்கள் எடுத்த நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை, சாலை தூசி மேலாண்மை, கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை, வாகன உமிழ்வு மற்றும் தொழில்துறை மாசு பாடு கட்டுப்பாடு, மரக்கன்றுகள் நடு தல் என 30-க்கும் மேற்பட்ட தலைப்பு களில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சமர்ப்பித்த சுயமதிப்பீடு அறிக்கை, அதற்கான துணை ஆவணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் இந்தூர் முதலிடமும், ஆக்ரா இரண்டா மிடமும், தானே மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
இக்கணக்கெடுப்பில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களும் கலந்து கொண்டன. இதில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் 200-க்கு 180.5 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாநகராட்சி தேசிய அளவில் 6வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில், “திருச்சி மாநகரை தூய்மையான நகரமாக பராமரிக்க வேண்டும் என்ற அமைச்சர் நேருவின் உத்தரவின் பேரில், மாநகராட்சி சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் அமைத்தல், குப்பை கள் தேங்காமல் அகற்றம், காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட பல பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருவதால் தேசிய அளவில் 6வது இடத்தை பெற்றுள் ளோம். தொடர்ந்து இதனை தக்க வைப்பதோடு வரும் ஆண்டுகளில் முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார். மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன் கூறுகையில், “காற்றின் தரம் குறைந்துள்ள நகரங் களில் திருச்சி இருந்ததால் அதனை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப் பாக, கட்டுமானங்களில் இருந்த பிரச்ச னைகள் களையப்பட்டுள்ளன.
மாநகரில் சாலைகள் பெரும்பா லும் எண்ட் டூ எண்ட் என்ற அடிப்படை யில் அமைக்கப்படுவதால் தூசிகள் குறைகிறது. அதோடு, தினமும் சாலைகளில் இருந்து மண் துகள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சாலைப் பணிகள் நடைபெறும் போது புழுதிகள் பறக்காமல் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரியாக மேற்கொள்வதால், குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், இந்தாண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதுபோன்று அனைவரது ஒத்துழைப்புடனான பல்வேறு பணிகளால் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை களுக்கான கணக்கெடுப்பில் திருச்சி மாநகராட்சிக்கு தமிழக அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. இது ஒரு தொடர் முயற்சியாகும். தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைக்கவும், முதலிடத்துக்கு முன்னேறவும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையை குறைத்தல், பயோ மைனிங் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடித்தல், எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்டவைகளையும் அதிகரிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளோடு, மாநகராட்சியின் வழக்கமான பணிகளும் தொடர் கண்காணிப்பில் மேற்கொள்ளப் படும்” என்றார்.