states

மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரிக்கை

இராமேஸ்வரம், நவ.8-  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22  மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டாவது நாளான செவ்வாயன்றும் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அக்டோபர் 27-ல் 7, நவம்பர் 5-ல் 15 என 22 இராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருடன் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்களன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் இரண்டாவது நாளான செவ்வாயன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் 3 கோடி அளவிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை தெரு பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார். மீனவ சங்கத்தலைவர்கள் சகாயம், எமரிட்ட உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் மீனவ மகளிர் அமைப்பினர் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.