states

உதட்டில் அல்ல... உயிர்க் கூட்டில்...

ஆதியில் வேட்டை சமூகமாக
வேரூன்றி இருந்தபோது 
தாய்வழிச் சமூகமாக 
மகளிர் மாண்பு தழைத்தது..

நிலவுடமை சமுதாயமாக பரந்து விரிந்த போது
பாலின பேதத்தால்
ஆணாதிக்கம் ஆல்போல் வளர்ந்தது.

சுயநல சூழ்ச்சி மனித மனதில் 
தாராக ஒட்டிக் கொள்ள
பெண் என்பவள் பேணிக்காக்க மட்டுமென்ற
பேதமையை ஊரெங்கும் உருவாக்கி
கதைபல சொல்ல காவியம் படைத்து
பெண்ணை உயர்த்திச் சொல்லி 
உயர்த்திச் சொல்லியே தாழ்த்தி வைத்தனர்..

குறைந்த ஊதியம் நிறைந்த வேலை
ஊசி நூலுக்கும் வரி
உட்காரும் இருக்கைக்கும் வரி
கழிவறைக்கு சென்றுவர நேரமானால் வரி
போராடும் உரிமைகூட பெண்களுக்கில்லாத
போக்கற்ற சூழல் சூழ்ந்து அழுத்த
தான் மூச்சுவிட
தன் சுவாசமே தனக்கு துணையென்று 
1820 நியூ இங்கிலாந்தில் கிளர்ந்து எழுந்ததால்
உழைக்கும் பெண்கள் சங்கம் உதயமானது..

தையல்கள்தானே என்று 
மதிக்காமல் மிதித்ததால்
தரணியே உற்றுப் பார்க்க 
தைக்கும் தையல்களெல்லாம் ஒன்றுகூடி 
நமக்கான விடியலை நாமே விதைப்போமென்று
வீறுகொண்டதால் விடையென வந்ததினம்.
உலக மகளிர் தினம்.

போராளி கிளாரா ஜெட்கின் சிந்தனையில் 
கிளர்ந்த எண்ணம் உலக மகளிர் தினமாக
1975 மார்ச் 8 முதல் உருவெடுத்ததால்
கில்லிதாண்டும் போதுகூட
ஆடவரைக் கண்டால்
சற்றுத் தள்ளியே நின்றவர்கள்
பின்னலை அகற்றிச்
சிகைக்கு அலங்காரம்
சூட்டியது மட்டுமல்லாமல்
சிந்தனைக்கும் அலங்காரம்
சூட்டிவிட்டார்கள்.

தடகள போட்டிமுதல்
தாவிப்பறக்கும் விமானம்வரை
எங்கும் மெல்லினங்கள்
பெண்கள் முன்னேற்றம் இன்று
“பேட்ரியாட்” வேகத்தில்.

எல்லாமுமாகி நிற்கும்
பெண்மையைப் போற்றுவோம்
உலக மகளிர் தினமென்பது உதட்டில் அல்ல
உயிர்க்கூட்டில் இருக்கட்டும்..

- தியாக இரமேஷ்