நைஜீரியா: நெரிசலில் 31 பேர் பலி
அபூஜா, (நைஜீரியா) மே 29- நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாயினர். தெற்கு ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் ஹார்கோர்ட் நகரில் உள்ள அசெம்பிளி ஆப் கார்டு தேவாலயத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உணவு வாங்க பலர் கூடியிருந்தனர். உணவு வழங்க துவங்கியவுடன், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர். சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, நைஜீரியர்களில் பத்து பேரில் நான்கு பேர் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
நேபாள பயணிகள் விமானம் மாயம்
காத்மாண்டு, மே 29- ஞாயிற்றுக்கிழமை காலை பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கிப் பறந்து கொண்டிருந்த தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ட்வின் ஓட்டர் விமானம் காணாமல் போனது. தாரா ஏர் அதிகாரியின் தகவல்படி பொக்காராவிலிருந்து 19 பயணிகளை ஏற்றிச் சென்ற 9என்-ஏஇடி விமானம் காலை 9:55 மணிக்கு தொடர்பை இழந்தது. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதிக்கு மீட்புப் படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. அந்த விமானத்தில் 13 நேபாளிகள், நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மானியர்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்து 17 பேர் மீட்பு
ஜாகர்த்தா, மே 29- இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் அமைந்த தெற்கு சுலாவெசி மாகாணத்தின் மகஸ்சர் தலைநகரில் உள்ள பாவோடிர் துறைமுகத்தில் இருந்து படகு ஒன்று 42 பயணிகளுடன் புறப்பட்டு பங்கஜெனி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் நோக்கி சென்றுள்ளது. மகஸ்சர் ஜலசந்தி பகுதியில் சென்றபோது கடலில் பெரிய அலைகள் எழுந்துள்ளன. இதில் கப்பலின் இயந்திரம் பழுதடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வியாழன் பிற்பகல் ஒரு மணியளவில் நடந்துள்ளது. இதுபற்றிய தகவல் மாகாண அதிகாரிகளுக்கு சனிக்கிழமை தெரிய வந்துள்ளது. உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. படகு கவிழ்ந்த பகுதிக்கு 45 மீட்பு பணியாளர்களுடன் கப்பல் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது இதுதவிர, விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 பேரை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது என மூத்த அதிகாரி வாஹித் என்பவர் கூறியுள்ளார்.