states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு, கர்நாடக  வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம், ஏப். 19 - கேரளத்தில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான உத்தரவை கேரள அரசின் பொது நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.

சிக்கிக் கொண்ட பாஜகவினர்

தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு சாதகமான மிகப்பெரிய அலை அடித்த போதிலும், அதை உணர்ந்து கொள்ளாத கோவை பாஜகவினர், எப்படியாவது அண்ணாமலைக்கு கூடுதல் வாக்குகள் வாங்கிவிட வேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள். கோவை கவுண்டம்பாளையம் வார்டு 15ல் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவோடு இரவாக ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்து வசமாக சிக்கிக் கொண்டார்கள். பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்றெண்ணி, கையில் வைத்திருந்த பணம், வாக்காளர் பட்டியல், பாஜகவின் நோட்டீஸ் ஆகியவற்றை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அவர்கள் வாக்கு அவர்களுக்கு இல்லை’

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பா ளர் மற்றும் பாமக வேட்பாளர்களுக்கு அவர்களது வாக்குகள் பயன்பட வில்லை.  திண்டுக்கல் தொகுதியில் அதிமுக  வேட்பாளரான முகமது முபாரக்  சொந்த ஊர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரம். அத னால் அவர் அங்கு வாக்களித்தார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா விருது நகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம். அதனால் அவர் அங்கு வாக்கத்தார். சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை தவிர மற்ற இருவரது வாக்குகளும் அவர்கள் போட்டியிடும் சின்னத்திற்கு அதாவது அவர்களுக்கு பயன்படவில்லை. 

40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்!
தொல். திருமாவளவன் நம்பிக்கை

அரியலூர், ஏப். 19 - தமிழகம் - புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இந்த பொதுத் தேர்தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல். எனவே, சங்பரிவாருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க இந்த கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கத் துடிக்கிற ‘சங்- பரிவார்’ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. இதனால் தான், ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

சங்கிகளின் ஊடுருவல்

சங்கிகள் எல்லா இடத்திலும் மெல்ல மெல்ல ஊடுருவி இருக்கிறார்கள். மதுரையில் வார்டு 55 சேதுபதி பள்ளி வாக்குச்சாவடியில் காவி நிற முண்டாசு கட்டிக் கொண்டு தேர்தல் பணி செய்த அரசு அலுவலரால் சர்ச்சை எழுந்தது. வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய கடும் எதிர்ப்பை அடுத்து அந்த அலுவலர் வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம், சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பைக்’ ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தானே இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார்.  அவர் புறப்பட்ட இடத்திலிருந்து வாக்குச்சாவடி வரையில் பைக்கைச் சுற்றி பாதுகாவலர்களும், அவரது கட்சிக் காரர்களும் கூடவே ஓடி வந்தார்கள். எளிமையாக இருக்கிறாராம்! அவ்வப்போது இப்படி ஒரு நாடகத்தை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

“சந்திர முகி”

நீலகிரி தொகுதியில் பல இடங்களில் பாஜகவின் பூத் ஏஜெண்டாக அதிமுகவினரே அமர்ந்து “கடமையை” ஆற்றியிருக்கிறார்கள். கோவை பொள்ளாச்சி தொகுதிகளிலும் இதேநிலைதான் என்று சமூக ஊடக ஆர்வலர்கள் கண்காணித்து பதிவிட்டிருக்கிறார்கள். பாஜகவானது, அதிமுகவை உள்ளிருந்தே தின்று வளர்கிறது; அதை கண்கூடாக உள்ளூர் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு பார்த்துச் செல்கிறார்கள். கள்ளக் கூட்டணி பழனிசாமி கமுக்கமாக பதுங்கியிருக்கிறார்.

‘மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்க...’

சென்னையில் வாக்குச்சாவடிக்கு வந்த பாஜகவின் விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகாவை செய்தியாளர்கள் பேட்டி கேட்டார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள சந்தித்திங்களே, அவங்க என்ன மனநிலையில் இருக்காங்க என்று கேள்வி. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்க என்று ராதிகா பதிலளிக்கிறார். அடுத்த நொடியே செய்தியாளர், அப்போ இந்தியா கூட்டணிதான் வெற்றிபெறும்னு சொல்றிங்களா என்று கேட்க ராதிகா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெல்ல நடையைக் கட்டினார். 

கள்ளக் கூட்டணி என்பது...

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கள்ளக் கூட்டணி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் கடைசி வரை எரிந்து விழுந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அண்ணாமலைக்காக கோவை தொகுதி முழுவதும் அதிமுக விட்டுக் கொடுத்தது என்பதை வாக்குப் பதிவு நாளன்று கண்கூடாக பார்க்க முடிந்தது. கோவை தொகுதியில் உள்ள சூலூரில்  அதிமுக அமைத்திருந்த பூத் சிலிப் வழங்கும் பந்தலில் காலையில் ஒரு நேரம் மணி நேரம் மட்டுமே இருந்த அதிமுகவினர் அதன் பிறகு முற்றாக காணாமல் போனார்கள். தொகுதியின் பல இடங்களில் இதுதான் நிலைமை. தாங்கள் மூன்றாவது இடத்திற்கு போனாலும் பரவாயில்லை, அண்ணாமலை இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று கோவை அதிமுக கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தது என்பது இதில் தெரிந்தது. இது எடப்பாடிக்கு தெரிந்தே தான் நடக்கிறது என்று சமூக ஊடக வாசிகள் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.



 

 

;