states

img

மண்ணைக் கவ்வ தயாராகு மன்னா! - தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு

தேர்தல் வரும் போது மட்டுமல்ல, சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் எழும்போதெல்லாம் அச்சமும் தயக்கமும் இன்றி பேசக்கூடியவர். பிரதமர் மோடியின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மதவெறியர்கள் அரங்கேற்றிய கோரத்தாண்டவம், மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என மதவாதத்தின் கொடுமைகளை தொடர்ந்து விமர்சனம் செய்வதுடன் அதற்கு எதிராக வலுவாக குரல் எழுப்பிக் கொண்டும் வருபவர் திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ். மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று பேசப்படுவது குறித்தும் மோடியின் ஆட்சியில் மாறியது என்ன என்பது குறித்தும் அடுக்கு அடுக்கான கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பாணியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் சுருக்கம்.

அரசியல் இல்லாமல் எதும் இல்லை !

முதலில் நான் ஒரு இந்திய குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன். நீ விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் நீயும் அரசியலில் இருக்கிறாய். நமது ஜனநாயகத்தில், கீழ் இருந்து மேல் நோக்கி தான். குடிமகன் என்பவன் வாக்களிப்பவன். அது அவனுடைய உரிமை. ஆட்சி அதிகாரத்தை கொடுப்பவன். கடந்த தேர்தலில் எவனோ ஒருத்தன் ஜெய்ச்சுட்டான் என்பதால் மக்கள் அனைவருமே அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இது எங்களுடைய நாடு. எங்கள் பணத்தில் ஆட்சி நடக்கிறது. எனது எதிர்காலம், பிள்ளை களின் எதிர்காலம் அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் தான். நீ தினசரி காலை யில் வீட்டிலிருந்து புறப்படுவதில் இருந்து அரசியல் இருக்கிறது. இந்த நாடும் ஆட்சியும் நடப்பது உன்னுடைய உழைப்பால், காசால் மட்டுமே!

பல வேடங்கள் தரிக்கும் மன்னர்

நீங்கள் பிரதமர் பெயரை சொல்லுகிறீர்கள். நான் அந்த பெயரை சொன்னாலே ஏய்யா அந்த ஆளு உயிர வாங்குற என்று  திட்டு கிறார்கள். அதனால் ‘மன்னர்’ என அழைக்கிறேன்.  அவர் தன்னை மன்னர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பழங்காலத்தில் மன்னர்கள் விதவிதமான ஆடை (காஸ்ட்யும்) அணிவார்கள். பல வேடங்கள் போடுவார்கள். புஷ்பக விமானம் வைத்திருப்பார்கள். இப்ப அப்படித்தான் இவரும் நடந்து கொள்கிறார். இந்த மன்னர் ஆட்சி எப்படி நடத்தி வருகிறார்? பத்தாண்டு காலம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்பது எனக்கு நன்றாக தெரியும். இதனால் இந்த ஆட்சி எனக்கு பிடிக்கல. மன்னரை கேள்வி மேல் கேள்வி கேட்கிறேன்.

எதுவும் மாறல செல்லம்!

எனது நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். மன்னரின் ஆட்சியில் நிறைய மாற்றம் வந்திருக்கிறது. பெங்களூரு ஏர்போர்ட் கூட மாறிவிட்டது என்றான். அதற்கு நான் சொன்னேன், எந்த ஏர்போர்ட்டும் மாறல செல்லம்.  இந்தியாவில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களும் அதானி ‘கை’ க்கு தான் மாறியிருக்கிறது. அதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்று பெங்களூர் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு இருவரும் காபி சாப்பிட்டோம். ஒரு காபியின் விலை எவ்வளவு என்று கேட்டான். 300 ரூபாய் என்றேன். என்னது? அதிர்ச்சியடைந்தான். இந்த பணம் முழுக்க அரசு கஜானாவுக்கு செல்லவில்லை. மன்னரின் நண்பர் அதானிக்கு போகிறது என்றதும் அமைதியாகிவிட்டான். அடுத்து, டோல்கேட் (சுங்கச்சாவடி) பாஸ் இருக்கா? என்றேன். இருக்கு, அதுல மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்றேன்? வெறும் 400 ரூபாய் தான் என்றான். இப்படியாக கோடிக்கணக்கான 400 ரூபாய் சேர்ந்தால் எவ்வளவு வரும்? இந்தப் பணமும் முழுவதுமாக அதானிக்கு தான் சொல்கிறது. இது பெரிய மோசடி இல்லையா? என்றதும் வாயடைத்துப் போனான். ஏன் என்றால், அவன் மன்னரின் விசுவாசி.

மன்னர் அவருதான்... டிரஸ் அவரது இல்ல?

கருப்புப் பணம் என்று சொன்னார்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றார்கள். எவ்வளவு தூரம் ஒழித்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா?.  நிமிடத்திற்கு நிமிடம் உடையை மாற்றும் நமது மன்னருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று சொல்ல முடியுமா?. அவரது பாதுகாப்புக்கு 1 கோடியே 60 லட்சம் தருகிறார்களே, அந்த பணம் யாருடையது?. ஊர் ஊராக சுற்றி வருவதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்று அவரால் சொல்ல முடியாது. நான் சொல்லுகிறேன்,  மக்கள் பணம். 

செல்ஃபி தான் முக்கியம்?

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்களைப் பாதுகாக்க 500 கோடி ரூபாய் கொடுப்பதற்கு நமது மன்னருக்கு மனம் இல்லை. தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை எட்டிக் கூட பார்க்க நேரமில்லை. முதலமைச்சர் கேட்ட நிவாரண நிதியும் கொடுக்கவில்லை. இதற்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் நிலை வர லாற்றில் ஏற்பட்டிருப்பது பெருத்த அவமானம். இது எதை பற்றியும் கவலையில்லை, கிரிக்கெட் மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் பெயர் சூட்டி செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.  அந்த மைதானத்தை சுற்றி ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதா? அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு செய்து கொடுத்தாரா?  இந்த நாட்டுக்கு எது முக்கியம்? மக்களுக்கு தேவை எது என்பது அவருக்கு முக்கியமல்ல?  

‘வெட்கமில்லை வெட்கமில்லையே’

மும்பையில் அஜித் பவாரை மிரட்டினார் கள், பாஜகவில் ஐக்கியமானார். கர்நாடகாவில் தேவ கவுடா குடும்பத்தை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு வரைக்கும் மூஞ்சில எச்சி துப்பிய ஒரு கட்சி (பாமக), இப்ப அந்தக் கட்சியை கூட்டணி யில் சேர்த்துக்கொண்டு கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறார்கள். எச்சிலை துப்பியவனுக்கும் வெட்கமில்லை. துப்பு வாங்கியவனுக்கும் வெட்கமில்லை. இந்த கொடுமைகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

இது மன்னர் கலாச்சாரம் !

தமிழ்நாட்டுக்கு வரும்போது வேட்டி கட்டிக்கிட்டு வருவது நீ தானே? இந்தியை திணித்தது நீ தானே? நீட் தேர்வை திணிப்பதும் நீ தானே? தமிழ்நாட்டு மக்கள், மொழி, கலாச்சாரத்தை மதிக்கும் உங்களது லட்சணம் இதுதானே?

பொய்யிலே பிறந்த பெருமான் !

விக்கிரமாதித்தன் கதைகளில் ஒரு நாளைக்கு 100 பொய்களை சொல்லவில்லை என்றால் தலை சுக்கு நூறாக உடைந்து விடும் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. அதைப் போன்று தான் இந்த மன்னர் பொய்களை சொல்லவில்லை என்றாலே தலை சுக்கு நூறாக உடைந்து விடும். கடந்த பத்து வருடத்தில் அவர் எந்த இடத்திலும் உண்மையை பேசியதே கிடையாது. அனைத்தும் பொய் மூட்டைகள் தான். அவருக்கு இரண்டு நாக்குகள். ஒன்று உண்மையை பேசும்.  எந்த நிகழ்ச்சிக்கு என்ன உடை அணிய லாம். அந்த ஊருக்கு எப்போது போகலாம். அந்த கட்சியை உடைப்பது எப்படி? மாற்று கட்சி  எம்எல்ஏக்களை மிரட்டல், குதிரை பேரம் மூலம் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கலாம்.  இப்படியாக உள்ளுக்குள் மட்டும் பேசிக் கொள்ளும். மற்றொரு நாக்கு, வெறும் பொய் மட்டுமே  சொல்லும்.

ஊழல் இல்லையா இது ? 

ஊழலில் எந்த ஒரு குற்றவாளியும் செய்ய  முடியாத புதிய தந்திரத்தை, கண்டுபிடித்த பெருமை மன்னருக்கு மட்டுமே உண்டு. அது தான் தேர்தல் பத்திரம். இந்த புதுமையான ஊழல் குறித்து வாய் திறந்திருக்கும் உள்துறை அமைச்சர் ‘சாணக்கியர்’, எங்க  கிட்ட 300 எம்பிக்கள் இருந்தும் இவ்வளவு தான் வாங்கினோம். 2 எம்பிக்கள் வைத்தி ருக்கும் ஒரு கட்சி 500 கோடி வாங்கி இருக்கிறது  என்று புது விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு இடத்தில் திருடுவதற்கு முதலில் 10 பேர் சென்றுள்ளனர். அது தெரியாமல் சென்ற இரண்டு பேரும் மாட்டிக்கொண்டனர். அப்போது, நாங்கள் 10 பேர் ஆளுக்கு 100 கோடி தான் எடுத்தோம். ஆனா, 2 பேர் மட்டுமே 1000 கோடியை எடுத்து இருக்கிறார்கள் என்று தப்பிக்க பார்த்தார்கள். இது மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையான திருடன் யார்? பணம் கொடுத்த முள்ளமாரிகள் யார்? என்பதும் தெரியும். தேர்தல் பத்திரம் ஊழல் இல்லை என்றால் இதற்கு பெயர்தான் என்ன?

இந்து ராஷ்டிரா அஜெண்டா!

ஆட்சி நடத்த வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம் அல்ல. ஒரு மொழி, ஒரு தர்மம், ஒரு நாடு என்ற இந்து ராஷ்டிரா கொண்டு வர வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. இதற்காக தான் மோடி முன்னாடி நிற்கிறார்.

தோல்வியின் பயமே ‘சார் சோ பார்!’

மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமை, மல்யுத்த வீராங்கனைகளை அவ மானப்படுத்தியது நாடு முழுவதும் மன்னரின் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறது. தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலங்களில் கடந்த முறை கிடைத்த சீட்டு கூட இந்த முறை கிடைக்காது. உண்மையில் 400 சீட்டுக்கு மேல் பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் நீங்கள் கொலைகாரன், கொள்ளையடிப்பவன், போக்கிரிகளை கட்சியில் சேர்த்துக் கொள்வது ஏன்? என்று கேட்டதற்கு பதில் இல்லை. இதை திசை திருப்புவதற்காக ‘ஆப் கி பார்’, ‘சார்ஸ் சோ பார்’  இந்த முறையும் மோடி ஆட்சிதான். 400 எம்பி சீட்டுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்வது தோல்வியின் பயமா‌கும்.

நாடாளுமன்றம் எங்கள் வீடு!

நான் இளைஞனாக இருந்தபோது, நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்த தலை வர்கள் பலரை பார்த்தேன். ஆனால், ஒரு கோயில் (ராமர்) கட்டுவதற்கு உண்ணாநிலை இருந்தவரை  இப்போதுதான் பார்க்கிறேன். அதுமட்டுமா? 11 நாட்கள் அந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தார் அவர். பிரதமர் இல்லாமல் ஒரு நாடு 11 நாட்கள் இருந்தது என்றால் அது இந்தியாதான். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றம் இஸ்லா மியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் என்று அனைவருக்கும் சொந்தமானது. நாடு  முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து 530 எம்பிக்கள், மண், கலாச்சாரம், மொழி, இனம் கடந்து வேலை பார்க்கும் ஒரு அலுவல கம்.  மேலும் அது என் வீடு. அந்த வீட்டில் உனது விருப்பம் போல் (மன்னர்) பூஜைகள் நடத்த நீங்கள் யாரு?

எங்கு இருக்கிறது ஜனநாயகம்!

மக்களால் தேர்வு செய்த அரசுகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ஆளுநர்களை கொண்டு ஆட்சிகளை கவிழ்ப்போம். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவோம். முதலமைச்சர்கள் சிறையில் அடைப்போம். எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வில்லை என்றால் அந்த மாநிலத்திற்கு எந்த  நிதியும் தரமாட்டோம் என்பதுதான் ஜன நாயகமா?.

ஒரே ஒரு தலைவரை காட்டுங்கள்!

ஒரு நடிகை 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிறார். நல்ல வேலை முதல் பிரதமர் மோடி தான் என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டில் ஒரு நடிகரோ அவரது மனைவியுடன்  பாஜக வில் சேர்ந்துவிட்டார். பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ?  உங்களை  விற்றுக் கொள்ளுங்கள். ஆனால், நாட்டை விற்காதீர்கள். இந்த நாட்டின்  விடுதலைக்காக போராடாத ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. நான் கூறுவது உண்மை  இல்லை என்றால், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள், போராடினார்கள் என்று பாஜக,  ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம்.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு













 

;