states

குமரியில் தொடர்ந்து மழை நீடிப்பு: அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில், செப்.17- குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை  பெய்தது. காலையிலும் மழை நீடித்தது. நாகர் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி  வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே  இருந்தது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான ஞாயிறன்று அருவி யில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பால மோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து  வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று காலை 17.56 அடியாக இருந்தது. அணைக்கு 677 கன அடி தண்ணீர் வந்து  கொண்டிருந்தது. அணையிலிருந்து 581 கன  அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி  தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 200 கன  அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு  வருமாறு: பேச்சிப்பாறை 7.6 மில்லி மீட்டர்,  பெருஞ்சாணி 17.2, பூதப்பாண்டி 6.4, களியல் 20.6, குழித்துறை 26.4, கொட்டாரம் 14,  மயிலாடி 8.4, நாகர்கோவில் 7.2, சுருளோடு 17, தக்கலை 19, குளச்சல் 6, இரணியல் 8.2,  பாலமோர் 19.4, மாம் பழத்துறையாறு 20.6,  திற்பரப்பு 16.8மி.மீ., மழை பெய்துள்ளது.