காந்திநகர், நவ.27- குஜராத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மணிப்பூரை சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை ராணுவ படையினர், போர் பந்தலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று இரவு துணை ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக போர் பந்தலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் தொய்பாசிங், ஜிதேந்திரா சிங் என்று தெரியவந்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது இனாவ்ச்சா சிங் என்று தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.