states

img

காலிப் பெருங்காய டப்பா பாஜகவும் அண்ணா... மலை...யின் ந...டை... பய....ணமும்...

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற் கொண்ட நடைபயணம் மதுரையில் டோட்டல் “ அவுட்”. கொளுத்தும் வெயிலில் பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும், காட்சி ஊடகத்தினரும் அண்ணாமலையோடு ஐந்து கி.மீ., தூரம் பயணித்து கூட்டம் காண்பித்தனர். இவர்களோடு 20-க்கும் மேற்பட்ட உளவுத் துறை அதிகாரிகள். சீருடை அணிந்த 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அடங்குவர் காவல்துறை துணை ஆணையர் ஒருவர் தமது ஸ்டிரைக்கிங் போர்சோடும்  காரில் வந்தார். காலை  ஒன்பது மணிக்குத் தொடங்கும் எனக் கூறப்பட்ட நடைபயணம் 10.29 மணிக்குத் தொடங்கியது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியி னர் சுமார் 30 பேர், மஞ்சள் கொடியில்  காவி யும்-சிவப்பும் கலந்த நிறத்தில் முத்திரையிடப் பட்ட கட்சிக் கொடிகளுடன் ஓரிருவர் காட்சி கொடுத்துவிட்டு கலைந்தனர். பாஜக-வினர் 250 பேரோடு நடைபயணம் தொடங்கியது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் மட்டுமே நடைபெற்ற நடைபயணம் பகல் 12.25 மணிக்கு செல்லூ ரில் நிறைவடைந்தது.

வர வர குறைந்த கூட்டம்

250 பேரோடு தொடங்கிய நடைபயணம் வர... வர... குறைந்தது. ஒரு கட்டத்தில் அது சரி பாதியாகக் குறைந்தது. பீ.பீ.குளம் பகுதியை  வந்தடைந்தபோது அங்கு வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரியில் படிப்பவர்கள் வழக்கறிஞர்க ளிடம் பயிற்சி வழக்கறிஞர்களாக பயிற்சி பெறு பவர்கள் வரவேற்றனர். பீ.பீ.குளத்தைக் கடந்து செல்லூருக்குள் நுழைந்த நடைபயணத்தில் 75 பேரே இருந்த னர். இல்லாத கூட்டத்தை இருப்பது போல் காட்ட   அவர்களே ஒருவரை ஒருவர் நெரிசலில் சிக்கிக் கொண்டவர்கள் போல் தள்ளிக் கொண்டே வந்தனர். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர்  நடைபய ணத்தில் பங்கேற்கவில்லை. அண்ணாமலை க்கு “டாட்டா” காட்டிவிட்டு மறைந்தனர். அதிமுக வினர் ஒருவரைக் கூட காணமுடியவில்லை இந்த நடைபயணத்தில் ஆட்களை விட கார்களே அதிகம் இருந்தன. கார்களைக்  கழித்துவிட்டுப் பார்த்தால் அண்ணாமலை யோடு நடந்தவர்கள் ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்திலிருந்து செல்லூரை அடைந்தி ருக்க முடியும். ஆனால் பாஜக-வின் ந...டை... பய....ணம் 12.30-க்குத் தான் நிறைவடைந்தது. நடைபயணத்தில் அண்ணாமலையின் கைகளை மட்டுமே பார்க்கமுடிந்தது. அவர் முகத்தைப்  பார்க்க முடியவில்லை. வருமானவரித்துறை அலுவலகம் எதிரே ஒரு கிறிஸ்தவர். நான்கு இஸ்லாமியர் அண் ணாமலையை வரவேற்கக் காத்திருந்தனர்.  அவர்களிடம் பாஜக பாடகர், ‘உன் மதமா, என் மதமா, ஆண்டவன் எந்த மதம்’ எனப் பாடினார். அவரிடம் ஒரு பத்திரிகையாளர் நீங்கள் எந்த மதம் எனக் கேட்டதற்கு பளிச்சென “இந்து”  எனப் பதிலளித்தார்.  செல்லூரில், பயணம் செய்யும் வேனில் இருந்தபடியே பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை 12.10 மணிக்குத் பேசத் தொடங்கி 12.30 மணிக்கு பேச்சை நிறைவு செய்தார்.

வீணடிக்காதீர்கள்...

அண்ணாமலை தனது உரையில் பாஜக- வினரை வெளுத்து வாங்கினார். இதை கட்சி யாத்திரையாகப் பார்க்காதீர்கள். இது மோடி யின் சாதனையைச் சொல்லும் யாத்திரை. 129 மாலைகள் போட்டிருக்கிறீர்கள். ஒன்றின் விலை ரூ. 2ஆயிரம் முதல்  3 ஆயிரம் இருக்கும். சைனா சில்க் (Fack Silk) சால்வைகள் 350 அணிவித்துள்ளீர்கள்.  எவ்வளவு பொருளாதா ரத்தை வீணடித்துவிட்டீர்கள். இதனால் யாத்தி ரையின் புனிதத்தை அசுத்தப்படுத்துகிறீர்கள். இனிமேல் சால்வை அணிவிக்காதீர்கள், மாலை அணிவிக்காதீர்கள் என உச்சக் குரலில் பேசினார். நான் மக்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மக்கள் என்னைப் பார்க்க அனுமதியுங்கள். தமிழகத்திற்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. மோடி ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி. திமுக ஆட்சி கலெக்ஷன், கரப்சன், கமிஷன் ஆட்சி. என் மண்... என் மக்கள்... யாத்திரையை நான் நடத்துகிறேன். தமிழகத்திலோ என் மகன்... என் பேரன்... ஆட்சி நடத்துகிறார்கள் என்றார்.

எய்ம்ஸ்- ஐ மோடி திறப்பாராம்

மதுரையில் கம்யூனிஸ்ட்  எம்.பி., உள்ளார். அவர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. புத்தகத் திருவிழாவில் பரிசளிப்பதற்கு ஒரு எம்.பி., தேவையா என புழுதிவாரி இறைத்தார். அதே நேரத்தில், 2026-ஆம் ஆண்டு மோடி தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறப்பார் என கூசாமல் பொய் கூறினார். திமுகவால் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை யைக் கூட கொண்டுவரமுடியவில்லை. ஆனால், பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி திறந்துள்ளார். மதுரையில் மோடியை சார்ந்த ஒருவர் தான் எம்.பி.யாக வேண்டும். கோவையிலும் அப்படித் தான் வேண்டும். 2024-ல் தமிழகத்தில்  39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்றார். ஒட்டு மொத்தத்தில் சனிக்கிழமை காலை அண்ணாமலை  நடத்திய நடைபயணம் பாஜக ஒரு காலிப் பெருங்காய டப்பா என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ச.நல்லேந்திரன், ஜெ.பொன்மாறன்

கேட்டதும்... பார்த்ததும்...

 நடைபயணம் தொடங்கிய இடத்தில் தனுஷ் டீ காபி பாரில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி ஒருவர் “என்னப்பா ரூட்ட கொடுக்கிறாங்க”. நேத்து மேலூருலே நடந் தார். அதுக்குள்ளயுமாப்பா எல்லா மக்களையும் பாத்துட்டு மதுரைக்கு வந்துட்டாரு என்றார். நடைபயணத்தில் பங்கேற்க 12  கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்துடன் கூடிய பெரிய ப்ளக்ஸ் பேனரை மாட்டிக் கொண்டு நடந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது சிம்மக்கல், செல்லூர் 50 அடி சாலையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர்.  சுமை தாங்கிகளாக மாற்றப்பட்ட  மாணவர்களை நினைத்த போது பரிதாபமாக இருந்தது. கூட்டம் நடைபெற்ற இடம் அருகே டீக்கடையில் நின்றுகொண்டிருந்த ஒருவர், ஏங்க கூட்டமே யில்லை. போலீஸ் தான் அதிகம் உள்ளது. ஏனென்றால் இவர்கள் ஏதாவது மதுரையில் பிரச்ச னையை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். பாஜக-வினரால் தான் மணிப்பூரும், ஹரியானாவும் பற்றியெறிகிறது என்றார்.  நடைபயணத்தில் புகார் பெட்டி ஒன்றையும் தூக்கிவந்தனர். நடைபயணம் நிறைவடைந்ததும் புகார் பெட்டியை திறந்து எங்கள் தலைவர் அதைப்படிப்பார் என்றனர். கடைசி வரை அது நடக்க வில்லை.   பாஜக அண்ணாமலை பேசி முடிந்தவுடன் “செல்லைக் காணவில்லை” யாரிடமாவது இருந்தால் கொண்டு வந்து கொடுங்கள்  என ஒலிபெருக்கி அலறியது.  அண்ணாமலையின் வாகனம் கிளம்பிச் செல்லும் வரை “செல்போன்” கிடைத்ததாகத் தகவல் இல்லை.   பாஜக-வினர் சிலர் காவி குல்லாக்களை அணிந்திருந்தனர். அதில் இந்தி, தமிழ், ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது.  இந்தியைத் திணிக்க “குல்லா மூலமும்” முயற்சி நடக்கிறது.