states

img

அருவருக்கத்தக்க பொருளாதார அசமத்துவம்!

இந்தியாவில் உள்ள ஆக்ஸ்பாம் கிளை (oxfam)அமைப்பு “பெரும் பணக்காரர்க ளின் சொத்து மதிப்பு உயர்வு - ஒரு இந்திய கதை” என்கிற ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.பல அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களையும் கவலை தரும் அம்சங்களையும் இந்த அறிக்கை வெளிக் கொண்டு வந்துள்ளது. பொருளாதார அசமத்துவம் என்பது முதலா ளித்துவ உற்பத்திமுறையின் தவிர்க்க இயலாத பின்விளைவு என்பது மார்க்சியம் முன்வைக்கும் மிக முக்கிய கருத்தாக்கம் ஆகும். குறிப்பாக நவீன தாராளமய பொருளாதார காலகட்டத்தில் இந்த அசமத்துவம் தங்குதடையின்றி உலகம் முழுவதும் விசுவரூபம் எடுத்துள்ளது. இந்தி யாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனை ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.

ஜி.எஸ்.டி. வரியை அதிகம் கொடுப்பது யார்?

டாலர் பில்லியனர்கள் எனப்படும் பெரும்  கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020ஆம் வருடத்தில் 102 பேர். 2022 இல் அது 166 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெரும் கோடீஸ்வ ரர்களில் 21 பேரின் சொத்து மதிப்பு மட்டும் 70 கோடி மக்களின் சொத்துக்களை விட அதிகம் என்பதையும் ,பெருந் தொற்று காலம் துவங்கி நவம்பர் 2022 வரை, பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து 121% அதாவது ,தினமும் 3608 கோடி ரூபாய் என்கிற அளவில் உயர்ந்துள்ளது எனும் அதிர்ச்சிகரமான தகவல்களை ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.  2020- 21ல் மட்டும் ஜி.எஸ்.டி வரி மூலம் சுமார் ரூ.14.83 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. இதில்  பலதரப்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட ஜி.எஸ்.டி. விவரங்கள்: இது ஜி.எஸ்.டி. வரிக் கொள்கையின் வர்க்க பாரபட்சத்தை மிக தெளிவாக வெளிப்படுத்து கிறது.  மக்கள் தொகையில்  வறுமை  கோட்டில் உள்ள 50%மக்கள் மறைமுக வரியாக,  10 சதவீதம் பெரும்  பணக்காரர்கள் செலுத்தும் வரியை விட ஆறு மடங்கு கூடுதலாக வரி செலுத்து கிறார்கள். ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களுக்கு, ஜிஎஸ்டி வரி விதித்து, அதன் மூலம்  ஈட்டுகின்ற வருவாயை, பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு என்பது தெளிவாகிறது.  இதே தருணத்தில் எளிய மக்கள் பயன் படுத்தும் எரிவாயு சிலிண்டர் மானியம் கொடுக்கா தது மட்டுமல்ல, அவர்களின் ஜீரோ பேலன்ஸ் (ஜன்தன்) வங்கிக் கணக்கில் இருந்து சேவைக் கட்டணம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் ரூ. 9800 கோடியை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. 

மக்கள் பிரிவு               மக்கள்        பெறப்பட்ட
                                         சதவீதம்     சதவீதம்

சாதாரண மக்கள்               50%              64%       
நடுத்தர மக்கள்                    40%             33%       
பெரும் பணக்காரர்கள்     10%                3%

ஒரு சிலரிடம்  குவியும் சொத்துக்கள்

பெரும் செல்வந்தர்கள் 5% பேரிடம் தேசத்தின் மொத்த சொத்துக்களில் 60% உள்ளது. ஆனால் அடித்தட்டு 50% மக்களிடம் வெறும் 3% சொத்து தான் உள்ளது. 2012 முதல் 2021 வரை புதிதாக உருவான சொத்துக்களில் ஒன்றிய மோடி அரசு, மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமாக உள்ள வர்களுக்கு  40% சொத்துக்கள் அதிகரிப்பதற் கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் 50 % சாதாரண மக்களுக்கு வெறும் 3 சதவீதம் மட்டுமே அளித்துள்ளது. மேலும் நூறு பெரும் பணக்காரர்களின்  சொத்துக்களின் மதிப்பு 660 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் 54.12 லட்சம் கோடி யாகும். இது ஒன்றிய அரசின்  18 மாத பட்ஜெட் தொகைக்கு இணையானது.  மறுபுறம் 2018 இல் பசியால் வாடியவர்கள் 19 கோடி என்பதிலிருந்து 2022-ல் 35 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் வறுமை யின் காரணமாக இறந்தவர்களில் 2022 இல் 65%  ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் 10 பெரிய பணக்காரர்க ளிடம் மட்டும் ரூ. 27.52 லட்சம் கோடி சொத்து உள்ளது. இந்த பெரும் தொகை மூலம்:

    இந்திய சுகாதார மற்றும் மருத்துவ செலவுகள் 30 ஆண்டுகளுக்கு செய்ய முடியும். 
    இந்திய கல்வித்துறைக்கு 26 ஆண்டுகள் நிதி ஒதுக்க இயலும்.
    கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை 38 ஆண்டுகளுக்கு அமலாக்க முடியும்.

2019ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு பெரு முதலாளிகள் செலுத்தும் கார்ப்பரேட் வரியை 30%லிருந்து 22% ஆக குறைத்துள்ளது. அதிலும் புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவீதத்துக்கு குறை வான வரி செலுத்தினால் போதுமானது என்று அறிவித்துள்ளது. இதனால் 1,03,285.54 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகவும், வரிவிலக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்கு  அளித்ததன் மூலம் ஒன்றிய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொகையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு  திட்டத்தில் இந்தியா முழுவதும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 16 மாதங்களுக்கு ஊதியம் கொடுத்திருக்க முடியும்.

அரசின் காதுகளுக்கு எட்டுமா?

  1. இத்தகைய பல விவரங்களை வெளிப் படுத்திய ஆக்ஸ்பாம் அமைப்பு ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளது:
  2.  நெருக்கடி காலத்திலும் பெரும் லாபமீட்டும் வரி கொள்கைகளை உடனே நிறுத்துங்கள்.
  3.  மேல்தட்டு 1% பெரும் செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக வரியை உயர்த்துங்கள். G சுகாதாரத் துறையை மேம்படுத்தும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% என பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  
  4. . உலகில் பல நாடுகளில் உள்ளது போல ஜி.டி.பி. யில்  6% கல்விக்கான நிதி ஒதுக்கீடாகசெய்வது.  
  5.  கல்வி கற்பதில் நிலவும் சமத்துவமின்மையை குறைக்க நடவடிக்கை முன்னெடுப்பது, உத வித்தொகைகளை அதிகரிப்பது, குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பெண்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிக அளவில் ஏற்படுத்துவது.  
  6.  அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாரா துறை யில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை உத்தரவாதப் படுத்துவது.  

- போன்ற ஆலோசனைகளை வழங்கி யுள்ளது. இது ஆட்சியாளர்களின் காதுக்கு  எட்டுமா?